ஃபிளை துபாய் சம்பவத்தையடுத்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களில் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணியாற்ற இஸ்ரேல் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இந்த விதிமுறைகளுக்குத் தான் முழுமையாகக் கட்டுப்படுவதை ஏர் பிரான்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏர் பிரான்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “மற்ற அனைத்து விமான நிறுவனங்களைப் போலவே, ஏர் பிரான்ஸ் நிறுவனமும் சேவை வழங்கும் நாடுகளின் அதிகாரிகளால் விதிக்கப்படும் நுழைவு விதிகளைத் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருவருக்குமே பின்பற்றுவதற்குக் கடமைப்பட்டுள்ளது.
அதன்படி டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் விமானங்களுக்காக இஸ்ரேல் அதிகாரிகளால் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த புதிய கொள்கையினால் பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, அல்ஜீரியா, துனிசியா உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 31 நாடுகளின் குடியுரிமை பெற்ற விமானப் பணியாளர்களுக்கு ஏர் பிரான்ஸ் தடை விதிக்கும். இஸ்ரேலின் ‘என்12’ செய்திச் சேனல் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் 1 அன்று வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழையும் விமானங்களின் பைலட் மற்றும் கேபின் பணியாளர்கள் இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத நாடுகளின் குடியுரிமையையோ அல்லது இரட்டைக் குடியுரிமையையோ பெற்றிருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை தேசியத்தின் அடிப்படையில் பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுவதாக அமைவதோடு, பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டப் போராட்டங்களுக்கும் வழிவகுக்கும் என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த புதிய விதியால் இஸ்ரேலுக்கு அல்லது இஸ்ரேலிய வான்வெளி வழியாக விமானங்களை இயக்கும் பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30 அன்று, துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் ஒருவர் கடத்தி, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் மோதச் செய்ய முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவே இஸ்ரேல் இத்தகைய தீவிரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது



