
1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.செய்
பாராளுமன்றம் இன்று சனிக்கிழமை (28) காலை 9.30 சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தெரிவிக்குழு ஒன்றை அமைக்குமாறு எம்.பி.க்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கையினை ஏற்று அதற்கான 11 உறுப்பினர்களைக்கொண்ட தெரிவுக்குழு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் ஏனைய உறுப்பினர்களாக நீதி. மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார,பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர,முனீர் முழப்பர் ,எம்.பி.க்களான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்ரீநேசன்,தேசிய மக்கள் சக்தியின் கிருஷ்ணன் கலைச்செல்வி, தனுர திசாநாயக்க,சேன, நாணயக்கார, ஹிருனி விஜேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் சுரங்க ரத்நாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவத்தின் தாக்கங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் நோக்கம் மேலும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளையும் இந்த விசேட தெரிவுக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றார்.



