
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள். குடிபோதையை முற்றுந் துறந்தவர்கள். வீதிப்போக்குவரத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள். அவர்களின் காலத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களுக்கு தற்போதைய பொலிஸாரின் அணுகுமுறை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தெரிகின்றது என வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கு, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அறிக்கைகளைப் பெற நீண்ட நேரம் காத்திருப்பதாக மக்கள் முறையிடுகின்றனர். கடமைநேரம் முழுவதும் தமிழில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளையும் பதிவகப் பணியாளர்களையும் நியமியுங்கள். அல்லது அத்தகைய திறனை வடகிழக்குப் பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிஸார் பெற்றிருக்க வகை செய்யுங்கள்.
முறைப்பாடுகள், வாக்குமூலங்கள், பொலிஸாரால் வழங்கக்கூடிய வழக்கு ஆவணங்கள் ஆகியவை தமிழில் வழங்கப்படுவது வட கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை.
முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது அவற்றைப் பதிந்து பதிவு இலக்கம் கொடுத்து அதன் முன்னேற்றத்தை அறிவதற்கான ஏற்பாடும் பொலிஸ் நிலையச் சேவை மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.
தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், தமிழில் முறைப்பாடுகளைப் பதிவு செய்து உரிய ஆவணங்களை வழங்குவதற்கும் பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பாகவும் இரகசியத்தன்மையுடனும் முறைப்பாடு செய்வதற்கும் தேவையான நடைமுறைப் பயிற்சி வன்னியில் முறைப்பாடுகளைப் பெறும் அனைத்து பொலிஸாருக்கும் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்.பொலிஸ் நிலையங்களில் கண்காணிப்புக்கருவிகள் பொருத்தப்படல் என்பவை தொடர்பான சாத்தியப்பாடுகளை அரசு ஆராயவேண்டும்
மதுபோதையில் கடமையாற்றுதல், சேவை வழங்கும்போது வெற்றிலை பாக்கு மெல்லுதல் என்பன அரச நடைமுறைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா? பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா? இவற்றோடு முறைப்பாட்டைப் பதிவு செய்ய இயலாது என்று பொலிஸ் நிலையங்கள் மக்களுக்குத் தெரிவிக்கலாமா?
ஏனெனில், 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் கூட வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள். குடிபோதையை முற்றுந் துறந்தவர்கள். வீதிப்போக்குவரத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள். அவர்களின் காலத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களுக்கு தற்போதைய பொலிஸாரின் அணுகுமுறையை மலைக்கும் மடுக்குமான வேறுபாடாகவே ஒப்புநோக்க வேண்டியுள்ளது.
உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தமிழ் மக்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்படுவதாக உணரும் நிலை மாற வேண்டும். போதைப்பொருள், கசிப்பு விற்பனை குறித்துத் தகவல் தருவோர் அஞ்சும் நிலையும் மாறவேண்டும். முறைப்பாட்டாளரின் தகவலை யார் அணுகினர் என்பதைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடும் இரகசியம் பேணப்படுவதற்கான ஏற்பாடும் பொலிஸ் நிலையச் சேவை வழங்கல் தொடர்பாக மேம்படுத்தப்படவேண்டியுள்ள மற்றொரு விடயம். சாட்சிகளுக்கு மிரட்டல் ஏற்பட்டால் அபாயத்தை உடனடியாக மதிப்பிட்டு பாதுகாப்பு வழங்கப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும். மரங்களுக்கு அருகில் மறைந்திருந்து வாகனங்களைத் தெரிவுசெய்து நிறுத்தும் நடைமுறையிலும் பாரபட்சம் குறித்த ஐயநிலை எழுகிறது.
மேலும், முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் இன்னமும் தனியார் காணியில் இயங்குகிறது. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பேசப்பட்டவாறு, கோவில்குடியிருப்பில் அமைக்கப்படும் புதிய நிலையத்துக்கு விரைவில்பொலிஸ் நிலையம் இடமாற்றப்படவேண்டும். தற்போதைய காணியை முருகேசு நாகம்மா, சி. பரமநாயகி உள்ளிட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு சொத்துச் சேதங்களுக்குரிய இழப்பீட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.



