கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா, ஆபத்தான ராணுவ பணிகளுக்காக ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்க ஏஐ மையத்தை திறந்துள்ளது. ஆபத்தான வெடிகுண்டுகளை அகற்றுவது, கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பது, போர் தளவாடங்களை சுமந்து செல்வது உள்ளிட்ட பணிகளுக்காக ரோபோக்களை பயன்படுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது.
எனவே இந்த ஆபத்தான பணிகளை மேற்கொள்ள ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்க, சியோலுக்கு தெற்கே உள்ள பாங்கியோ (Pangyo) நகரில் அதிநவீன தளத்தை தென்கொரியா அமைத்து உள்ளது. இதுதொடர்பாக பேசியிருக்கும் அந்நாட்டு உயரதிகாரிகள், மனித வடிவிலான மற்றும் பல கால்களைக் கொண்ட ரோபோக்களுக்கு, நிஜ உலகச் சூழலைக் கையாள்வதற்கான மேம்பட்ட AI மாதிரிகள் மற்றும் இயற்பியல் தரவுகள் மூலம் இங்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை, உயிருக்கே ஆபத்தான போர் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்படும் என்றனர்.
‘
தென்கொரியா தனது நாடு தழுவிய திட்டத்தின் கீழ், பல ராணுவப் பிரிவுகள் மற்றும் கூட்டுப் படைத் தலைமையகங்களை உள்ளடக்கி, மொத்தம் 5 AI பயிற்சி மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று தான் தற்போது பாங்கியோவில் திறக்கப்பட்டுள்ளது.



