ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள கொலோன் நகரில், ரோபோ ஒன்றைப் பயன்படுத்தி 16 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரோபோவைப் பயன்படுத்தி இவ்வாறான குற்றச் செயல் இடம்பெற்றிருப்பது தங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம் என ஜேர்மனிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில், துரித உணவகம் ஒன்றுக்கு அருகிலுள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 120 சென்ரிமீற்றர் உயரமுடைய அந்த ரோபோ, வெள்ளை நிற மேலாடை, கறுப்பு நிறக் காற்சட்டை, தங்கச் சங்கிலி, சூரியக் கண்ணாடி மற்றும் போலி மீசை ஆகியவற்றுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த ரோபோ சிறுமியின் பின்பகுதியைத் தொட்டதுடன், பாலியல் ரீதியான அசைவுகளையும் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரோபோவின் உரிமையாளரான 16 வயது சிறுவனும், அவனது 19 வயது நண்பனும் சம்பவத்தை காணொளியாகப் பதிவு செய்து, இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பியதுடன் அதற்கு வர்ணனையும் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட கொலோன் பொலிஸார் ரோபோவையும் இரு இளைஞர்களின் கைப்பேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ரோபோவின் அசைவுகள் முன்கூட்டியே நிரலாக்கம் செய்யப்பட்டிருந்தனவா அல்லது நிகழ்நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொருத்தமற்ற கருத்துகளைப் பகிர்வோருக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



