சவூதி அரேபியாவில் அனோஜனுக்கு மரண தண்டனை இரத்தானமை வரவேற்கத்தக்கது –

 

 

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து – முழுமையான விடுதலைக்கும் பாதுகாப்பான தாயகம் திரும்புவதற்கும் புதிய நம்பிக்கை

சவூதி அரேபியாவில் இலங்கை, கல்முனையைச்சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன். இது அவரது குடும்பத்தினருக்கு மீண்டும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தீவுகள் ஆராயுங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அனோஜனுக்கு, எஞ்சியுள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து, அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டு, பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என நாம் தொடர்ந்து நம்பிக்கையுடன் பிரார்த்திக்கின்றோம். இந்த விடயத்தில் ஆதரவளித்த சவூதி அரேபிய அரசாங்கம், இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சித் தலைவர், சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் நீங்கள் அனைவரும் வெளிப்படுத்திய கூட்டு முயற்சி, மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமை ஆகியவை அளப்பரியவை.

முஸ்லிம்களாகிய நாம், எமது உயிரைவிட மேலாக அன்பிற்குரிய நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நேசிக்கின்றோம். இந்த அன்பையும் மதிப்பையும் நிலைநாட்டுவதில் நாம் திடமான உறுதியுடன் இருக்கின்றோம். அதேவேளை, சட்டபூர்வமான மற்றும் அமைதியான வழிமுறைகளின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

இந்த முன்னேற்றம் அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையையும் மன அமைதியையும் அளித்து, இந்த விவகாரம் சாதகமான முறையில் முழுமையாக முடிவடைய வழிவகுக்கட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.” என்றார்