நியூயோர்க்விமான பணிப்பெண்ணை கடித்த அமெரிக்க நடிகை கைது

 

விமானத்தில் ஏற்பட்ட தகராறில் இரண்டு விமான பணிப்பெண்களை தாக்கி காயப்படுத்தியதோடு, அவர்களில் ஒருவரை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்க நடிகை செல்மா ப்ளேர் (வயது 54) கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து நியூயோர்க் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்திலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இரவு டெல்டா ஏர்லைன்ஸ் விமானமானது ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அந்த விமானத்தில் பயணித்த நடிகை செல்மா, அப்போது கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்த நடிகை, பணிப்பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட குறித்த முறைப்பாட்டுக்கமையவே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

விமானத்தினுள் ஏற்பட்ட தகராறில் செல்மா, விமானப் பணிப்பெண்களில் ஒருவரை கீறியும் மற்றையவரை கடித்தும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

செல்மாவுக்கு அவசர மருத்துவ தேவைப்பாடு காரணமாக ஏற்பட்ட மனநிலையில்தான் அவர் இப்படி நடந்துகொண்டதாக நடிகையின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, காயமடைந்த இரண்டு விமான பணிப்பெண்களில் ஒருவருடன் செல்மாவும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது செல்மா உடல் நிலை தேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எப்போதும் முதன்மையானது என்பதால், ஒழுங்கற்ற அல்லது சட்டவிரோத நடத்தையை டெல்டா விமான நிறுவனம் சற்றும் பொறுத்துக்கொள்ளாது” எனத் தெரிவித்துள்ளார்.