
ஸ்பெயின் அதிகாரிகள், வியாழக்கிழமை இபிசா தீவு அருகே 7,000 டன் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் கப்பல் மால்டா நாட்டின் கொடியுடன் பயணித்தது. மத்தியதரைக் கடலின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பெரிய அளவிலான மாசுபாடு ஏற்படுவதைத் தடுப்பதே அதிகாரிகளின் முக்கிய நோக்கமாகும்.
மதிய நேரத்தில், கப்பல் கடலில் முழுமையாக மூழ்காமல் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் இருந்ததாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்தது. கப்பலில் இருந்த பணியாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒரு கப்பலும், மீட்புப் படகும் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தொலைவிலும், இபிசா தீவிலிருந்து வடக்கே சுமார் 56 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது X சமூக வலைத்தளத்தில், வலென்சியா மற்றும் இபிசா இடையே கவிழ்ந்துள்ள Med Emre கப்பலின் நிலைமையைத் தனது அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 120 மீட்டர் நீளமுள்ள இந்த எண்ணெய்க் கப்பல், அல்ஜெசிராஸ் (Algeciras) துறைமுகத்திலிருந்து பார்சிலோனாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத காரணத்தால் கப்பலுக்குள் நீர் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கப்பலில் சுமார் 66,000 பேரல்கள் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் பொருட்கள் இருந்ததாக கடல்சார் கண்காணிப்பு நிறுவனமான Kpler தெரிவித்துள்ளது.
இரண்டு பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகள்
மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர், உயிர் பிழைத்த ஆறு பேர் இபிசா விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களில் ஒருவர் பின்னர் இபிசா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த விபத்து, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நிகழ்ந்துள்ளதாகக் கடல் பாதுகாப்பு அமைப்பான Oceana கவலை தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் இரண்டு பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன:
மத்தியதரைக் கடல் திமிங்கிலங்கள் மற்றும் பிற கடல்வாழ் பாலூட்டிகளின் இடம்பெயர்வு வழித்தடம்.
இபிசா கடல்சார் கால்வாய்.
Oceana அமைப்பின் ஐரோப்பிய கடல் ஆய்வுப் பிரிவு இயக்குநர் ரிக்கார்டோ அகுய்லர் கூறுகையில், இந்தப் பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியாகும். கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க அதிகாரிகள் விரைவாகச் செயல்பட வேண்டும்
என்றும், விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விபத்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், மீன்பிடித் தொழில் மற்றும் பிராந்தியத்தின் பிற வணிக நடவடிக்கைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடல் மாசுபாட்டைத் தடுக்கும் அவசர நடவடிக்கைகள்
கப்பல் விபத்தைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு 11.45 மணிக்கு (சுவிட்சர்லாந்து நேரம்), ஸ்பெயினின் கடல்சார் பொது இயக்குநரகம் தேசிய கடல்சார் அவசரத் திட்டத்தை இரண்டாம் நிலைக்கு உயர்த்தியது.
விபத்துக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதும் இதன் நோக்கமாகும்.
மேலும், கடற்கரைகளில் எண்ணெய் அல்லது எரிபொருள் மாசுபாடு ஏற்படக்கூடிய சாத்தியத்தை முன்கூட்டியே கணித்து, தேவையான நடவடிக்கைகளைத் தயார்படுத்துவதற்காக தேசிய கடற்கரைப் பாதுகாப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது கடற்கரையில் ஏற்கெனவே மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வான்வழி ஆய்வுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கடலில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பிடமும் உதவி கோரப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு Prestige கப்பல் விபத்துடன் ஒப்பீடு
இந்த விபத்தை 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் கடற்கரையில் நிகழ்ந்த Prestige எண்ணெய்க் கப்பல் விபத்துடன் ஒப்பிட்டுள்ளார் கடல்சார் பாதுகாப்புப் பேராசிரியர் எமிலியோ ரோட்ரிக்ஸ் டியாஸ்.
அவர் Cadena SER வானொலிக்கு அளித்த பேட்டியில்:
2002ஆம் ஆண்டு Prestige கப்பலில் 77,000 டன் எண்ணெய் இருந்தது.
தற்போதைய Med Emre கப்பலில் சுமார் 7,000 டன் எரிபொருள் உள்ளது.
இது Prestige கப்பலின் சரக்கில் சுமார் 10 சதவீதமாகும்.
2002ஆம் ஆண்டு Prestige கப்பல் விபத்தில் சுமார் 63,000 டன் கனரக எரிபொருள் எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் ஸ்பெயினின் வடமேற்குக் கடற்கரை, போர்ச்சுகல் மற்றும் பிஸ்கே வளைகுடா பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இரட்டை அடுக்கு பாதுகாப்புக் கட்டமைப்பு
இந்த Med Emre கப்பல் இரட்டை அடுக்குக் கட்டமைப்பைக் (Double Hull) கொண்டது என்பது முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.
2019ஆம் ஆண்டு துருக்கியில் கட்டப்பட்ட இந்தக் கப்பல், MARPOL எனப்படும் சர்வதேச கடல் மாசுபாட்டுத் தடுப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
5,000 டன்னுக்கு அதிகமான கொள்ளளவு கொண்ட எண்ணெய்க் கப்பல்களுக்கு இந்த இரட்டை அடுக்குக் கட்டமைப்பு கட்டாயமாகும்.
இந்தக் கட்டமைப்பில், கப்பலின் வெளிப்புறச் சுவருக்கும் சரக்குகள் வைக்கப்படும் உள்புறப் பகுதிக்கும் இடையில் கூடுதல் பாதுகாப்பு அடுக்கு இருக்கும்.
இதனால் கப்பலின் வெளிப்புறச் சுவர் சேதமடைந்தாலும், எரிபொருள் நேரடியாகக் கடலில் கசியும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
பேராசிரியர் எமிலியோ ரோட்ரிக்ஸ் டியாஸ் இதனை ஒரு வகையான பாதுகாப்புக் கவசமாக விளக்கியுள்ளார்.
தற்போதைய நிலைமை: கப்பல் கவிழ்ந்துள்ள நிலையில் இருப்பதால், அதிலுள்ள 7,000 டன் எரிபொருள் கடலில் கசிந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
செயற்கைக்கோள் மற்றும் வான்வழி ஆய்வுகளின் முடிவுகள் அடுத்த சில மணி நேரங்கள் மற்றும் நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது



