
பாலியல் குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவரை, அவருடன் எவ்விதத் தொடர்புமில்லாத ஆபிரிக்க நாடான எஸ்வாட்டினிக்கு (Eswatini), பிரித்தானிய அரசாங்கம் கட்டாயமாக அனுப்பியுள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கோ, எஸ்வாட்டினி மக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத உடன்படிக்கையின் அடிப்படையில் அனுப்பப்பட்ட 35 வயதான கிஷாந்த் பெரமால்யா (Kishanth Peramalya), அங்கு சென்ற சில மாதங்களில் உயிரிழந்துள்ளார்.
2021ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கடல் வழியாகச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் பலருடன் இவரும் பிரித்தானியக் கடற்படையினரால் மீட்கப்பட்டார்.
பின்னர் பிரித்தானிய – அமெரிக்க இராணுவத் தளமான டியாகோ கார்சியா தீவிலுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டார்.
இலங்கைக்குத் திரும்புவது பாதுகாப்பானதல்ல எனத் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு அகதிப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், சுமார் மூன்று ஆண்டுகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்தத் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலங்கை இராணுவத்தினரால் கடந்த காலத்தில் சித்திரவதைக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருந்த அவர், கடுமையான மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, டியாகோ கார்சியாவில் இருந்த காலத்தில் தாக்குதல், தீவைப்பு மற்றும் நான்கு பாலியல் தாக்குதல் குற்றங்களில் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.
2024 டிசம்பரில் ஏனைய இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டபோதும், அவரது குற்றப் பின்னணி காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அவரை வேறொரு நாட்டில் குடியமர்த்துவதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரித்தானியா அணுகியிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2026 மார்ச் இறுதியில் மாலைதீவுக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் எஸ்வாட்டினிக்கு மாற்றப்பட்டார்., அவரது தங்குமிடம், மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ளப் பிரித்தானியா இணங்கியிருந்தது.
எனினும், மொத்தச் செலவுத் தொகையோ, அவருக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்களை எவ்வாறு கையாள்வது என்பதோ அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.
குடும்பத்தினர் எழுப்பும் கேள்விகள்
எஸ்வாட்டினியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரது மனநலம் மேலும் மோசமடைந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
அவரை நிரந்தரமாக அந்நாட்டில் குடியமர்த்தும் திட்டம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி அவர் உயிரிழந்த நிலையில், அவரைக் கையாண்ட விதம் தொடர்பில் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர்.
ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை
அவரது மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR), அகதிகளை மூன்றாவது நாடுகளுக்கு மாற்றும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் நடவடிக்கை மிகவும் அசாதாரணமானது என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் குடியேற்ற ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க நாடுகள் உலகின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கொட்டும் இடமாக மாற்றப்படுவதாக எஸ்வாட்டினி மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரித்தானிய அரசாங்கத்தின் பதில்
பிரித்தானிய மக்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என்றும், கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ருவாண்டாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டத்தைத் தொழிற்கட்சி அரசாங்கம் கைவிட்டிருந்தது. எனினும், சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்ப முடியாத, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை மூன்றாவது நாடுகளுக்கு அனுப்பும் திட்டங்களைப் பிரித்தானியா தற்போது ஆராய்ந்து வருகின்றது.
இந்நிலையில், எஸ்வாட்டினி விவகாரம் அகதிகளின் மனித உரிமைகள், உள்ளூர் மக்களின் பாதுகாப்பு, அரசாங்கங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நாடாளுமன்றக் கண்காணிப்பு தொடர்பில் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.



