அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஈரி (Erie) நகரில் உள்ள தனது வீட்டில் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பிற உறவினர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொன்ற நபர் ஒருவர், பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை (11) தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தார்.
தெருவில் இரண்டு பெண்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்; ஏனைய பாதிக்கப்பட்டவர்கள் வீடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பென்சில்வேனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கி வன்முறை காப்பகம் (Gun Violence Archive) தொகுத்த தரவுகளின்படி, 2026 இல் அமெரிக்காவில் 400-க்கும் மேற்பட்ட பாரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன.
பென்சில்வேனியாவில் கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூடு ஜூலை மாதம் பிலடெல்பியாவில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.



