
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள போக்கோர் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் கடந்த திங்கட்கிழமை சுரங்கத் தொழிலாளர்கள் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெய்த பலத்த மழையால் அருகிலுள்ள சிசூரூ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 330 அடி ஆழமுள்ள சுரங்கக் குழிக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் 11 தொழிலாளர்கள் உயிர் தப்பிய நிலையில், சட்டவிரோதச் செயல் என்பதால் அதிகாரிகளுக்கு 16 மணி நேரம் தாமதமாகவே தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர், ராட்சத மோட்டார்கள் மூலம் சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் சுமார் 100 முதல் 130 அடி ஆழத்திலிருந்து 9 தொழிலாளர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ள மேலும் 17 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறுகிய வழி காரணமாக மீட்புப் பணியில் சவால் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



