
போர்க்களத்தில் பதிவாகும் எண்கள் வெறும் கணக்குகள் அல்ல; அவை சிதைந்த குடும்பங்களின் கதைகள். நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்யாவின் இளம் தலைமுறையும், பின்தங்கிய பிராந்தியங்களும் மிகக் கடுமையான விலை கொடுத்து வருகின்றன.
ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஓர் உயிர் போர்க்களத்தில் பலியாகிறது. 2022 பிப்ரவரியில் முழு அளவிலான உக்ரைன் போர் தொடங்கியது முதல், ரஷ்யா இழந்துள்ள வீரர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் முதல் 7.20 லட்சம் வரை எட்டியிருக்கலாம் எனப் புதிய புள்ளிவிவர ஆய்வுகள் அதிர்ச்சி கிளப்புகின்றன.
ரஷ்ய அரசின் புள்ளிவிவர நிறுவனமான ‘ரோஸ்ஸ்டாட்’ (Rosstat) தரவுக் கசிவு, பிபிசி, மீடியாசோனா (Mediazona) மற்றும் மெடுசா (Meduza) ஆகிய ஊடகங்களின் தொடர் புலன் விசாரணைகளில் அடுக்கடுக்காகப் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
முதல் கட்டம் (2014): 2014 பிப்ரவரியில் ரஷ்யா, உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. தொடர்ந்து ஏப்ரல் 2014-ல் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் மோதலில் 2014 முதல் 2021 வரை சுமார் 14,400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
முழு அளவிலான போர் (2022): 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது முழு அளவிலான ராணுவப் படையெடுப்பைத் தொடங்கினார். நவம்பர் 2026 நிலவரப்படி, இந்த முழு அளவிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து 5-வது ஆண்டாக, ஏறக்குறைய 57 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரஷ்யா தரப்பில் உயிரிழப்பு எவ்வளவு?
உக்ரைனுடன் நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவில் இதுவரை எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் எந்தத் தகவலையும் வெளியிடாமல், தொடர்ந்து ரகசியமாகவே வைத்துள்ளது.
கடைசியாக 2022-ம் ஆண்டு செப்டம்பரில் போரில் 5,937 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா எந்தவொரு அதிகாரபூர்வ உயிரிழப்புப் பட்டியலையும் வெளியிடவில்லை; பிற ஊடகங்களின் கணிப்புகளையும் ‘நம்பத்தகாதவை’ என மறுத்து வருகிறது.
போரினால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதற்காக, அரசு நிறுவனமான ‘ரோஸ்ஸ்டாட்’ 2025-ம் ஆண்டில் இருந்து மக்கள்தொகை விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியது.
இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் உக்ரைனுக்கு ஆதரவான ‘சைபர் பார்ட்டிசன்ஸ் ஆஃப் பெலாரஸ்’ மற்றும் ‘சைலன்ட் க்ரோ’ ஆகிய இரண்டு ஹேக்கர் குழுக்கள் ரோஸ்ஸ்டாட்டின் சர்வர்களை ஊடுருவித் தகவல்களைத் திருடி வெளியிட்டன. இதையடுத்து மீடியாசோனா மற்றும் மெடுசா உள்ளிட்ட ஊடகங்கள் அந்த அதிகாரபூர்வத் தரவுகளைப் பெற்று ஆய்வு செய்தன.
இதில் மீடியாசோனா மற்றும் மெடுசா ஆகிய ஊடகங்கள், ரஷ்யா தரப்பில் நடந்த உயிரிழப்புகள் குறித்த கணக்கெடுப்பை நீண்டகாலமாக நடத்தி வருகின்றன. 1980-களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் நடத்திய போரின்போதும், 1990-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் நடைபெற்ற செச்சினியப் போர்களின்போதும் ரஷ்யா சந்தித்த உயிரிழப்புகளை விட, உக்ரைன் போரில் ரஷ்யா மிக அதிக அளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிபிசி ஊடகம் 2026 நவம்பரில் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைன் போரில் 2,90,012 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக பெயருடன் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், பொதுவெளியில் பதிவாகும் இந்த உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கையில் 45% முதல் 55% வரை மட்டுமே இருக்கும் என்று ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதன்படி கணக்கிட்டால், ரஷ்யாவின் உண்மையான ராணுவ உயிரிழப்பு 5,27,295 முதல் 6,44,473 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
‘மெடுசா’ மற்றும் ‘மீடியாசோனா’ ஆகிய ஊடகங்கள் இணைந்து நடத்திய புள்ளியியல் ஆய்வில், செப்டம்பர் 2026 வரை 7 லட்சம் முதல் 7.20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சராசரியாகப் பார்த்தால், போர் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கு ஒரு ரஷ்ய வீரர் உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் மரணமும், பிராந்திய ஏற்றத்தாழ்வும்:
2025-ம் ஆண்டில் ரஷ்யாவில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மொத்த உயிரிழப்புகளில் 65 சதவீதமும், 25 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்களின் மரணங்களில் 59 சதவீதமும் உக்ரைன் போரினால் நிகழ்ந்தவையாகும் எனத் தெரியவந்துள்ளது.
1979 முதல் 1989 வரை நடந்த ஆப்கானிஸ்தான் போரில் சோவியத் யூனியன் சுமார் 15,000 வீரர்களை மட்டுமே இழந்தது. ஆனால், உக்ரைன் போரில் வெறும் நான்கரை ஆண்டுகளில் அதைவிட 30 மடங்குக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது.
வெளிநாட்டவர்கள் உயிரிழப்பு:
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிட்ட வெளிநாட்டு வீரர்கள் 5,017 பேர் உயிரிழந்துள்ளனர் என ரோஸ்ஸ்டாட் தரவுகளை ஆய்வு செய்தபோது தெரியவந்துள்ளது. இதில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 1,031 பேரும், தஜிகிஸ்தானைச் சேர்ந்த 720 பேரும் (அல்லது 730 பேர்) உயிரிழந்துள்ளனர். இது தவிர, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பகுதியில் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிட்டு 2,304 வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டதைப் பியோங்யாங்கில் கட்டப்பட்ட நினைவிடத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் கண்டறிந்துள்ளது.
உக்ரைன் தரப்பில் எத்தனை பேர்?
உக்ரைன் தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து அந்நாடும் அதிகாரபூர்வ உயிரிழப்புத் தரவுகளை வெளியிடுவதில்லை. இருப்பினும், போரில் ஏற்பட்ட இழப்புகளின் அளவை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
‘CSIS’ எனும் ராணுவ ஆய்வு நிறுவனம் ஜூலை மாதம் நடத்திய ஆய்வில், உக்ரைன் தரப்பில் 5,25,000 முதல் 6,25,000 வரையிலான வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் 1,25,000 முதல் 1,50,000 வீரர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.



