
சீனாவில் அதிபர்கள் டிரம்ப், ஜின்பிங், புடின் இடையே சுமார் 90 நிமிடங்கள் நீடித்த முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின், உலக அமைதி, தடையற்ற எரிபொருள் விநியோகம், அணுஆயுதக் கட்டுப்பாட்டிற்காக ஒன்றாக இணைந்து செயல்படுவதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற 33வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (அபெக்) உச்சி மாநாட்டில், அதன் 21 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், 2000க்கும் மேற்பட்ட வர்த்தக மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் இடையே, உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன நாட்டு அதிபர்கள் நேற்று சந்தித்து முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் பல்வேறு உலக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், அணுஆயுத வல்லரசுகளான 3 நாடுகளும் உலக அமைதியைப் பாதுகாப்பதில் சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். அணுஆயுதங்கள் முற்றிலுமாகத் தடை செய்து, அவை அழிக்கப்பட்டு அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாடுகளாக, சர்வதேச அமைதியைப் பாதுகாப்பதில் 3 நாடுகளுக்கும் கூட்டுப் பொறுப்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார்.
‘
சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமைதியை நோக்கிய சீனா-ரஷ்யா-அமெரிக்கா தலைவர்களின் பிரகடனம் என்ற 4 அம்ச கூட்டறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையின்படி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான இந்த 3 நாடுகளும், சர்வதேசப் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் உலக அமைதியைப் பாதுகாக்க இணைந்து செயல்பட உறுதியளித்தன. சர்வதேச சவால்களைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் ஐநா சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் சம்மதித்தன.
அணுஆயுதப் போரில் யாரும் வெற்றி பெற முடியாது. அது ஒருபோதும் நடந்து விடக் கூடாது என 3 நாடுகளின் தலைவர்களும் உறுதிபூண்டனர். அணுஆயுதங்களைக் குறைப்பதற்கும், அதன் பரவலைத் தடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்தன.
இருப்பினும், இதில் அணுஆயுதங்களைக் குறைப்பதற்கான காலக்கெடுவோ அல்லது புதிய ஒப்பந்தம் குறித்த உறுதியான அறிவிப்புகளோ இடம் பெறவில்லை.
உக்ரைன் போர் மற்றும் ஈரான் போர் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிராந்திய மோதல்களுக்கு தீர்வு காண்பதில் 3 நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டன.
மேலும், சர்வதேச அளவில் தடையற்ற மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தைச் சீராக வைத்திருக்கவும், அனைத்து நாடுகளின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தன.
கடல்வழிப் பாதுகாப்பு விவகாரத்தில் குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற எரிபொருள் விநியோகம் நடைபெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் தலைவர்கள் கலந்து ஆலோசித்ததாக தெரிவித்தன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அவற்றின் அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூட்டறிக்கையில் கூறியுள்ளன.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த சீன அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் வெகுவாக பாராட்டினர்.
வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முதல் முறையாக சந்தித்து கலந்து ஆலோசித்தது முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், கூட்டறிக்கையில் உக்ரைன் போர் நிறுத்தம் அல்லது அணு ஆயுதக் குறைப்பு குறித்த உடனடி ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்பதும் அதற்கான நேரடி அறிவிப்புகளோ அல்லது தீர்வுத் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பதும் ஏமாற்றம் அளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த 1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் தலைவர்கள் யால்டாவில் நடத்திய உச்சி மாநாட்டை போலவே இதுவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சர்வதேச நாடுகள் உற்றுநோக்கிய நிலையில், சுவாரஸ்யமின்றி முடிவடைந்துள்ளது.



