ஹைதராபாத்தில் கடந்த 10 நாட்களில் வெவ்வேறு சம்பவங்களில் 3 இளம் பெண்கள் ஹோட்டல் அறைகளில் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து குறைந்த கட்டணத்தில் ரூம்களை வாடகைக்கு வழங்கும் சிறிய ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மீது தற்போது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது. ஆண் மற்றும் பெண் ஜோடியாக வந்து ரூம் எடுத்து தங்கும்போது, அவர்களில் ஒருவர் மட்டும் வெளியேறி மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பாமல் இருந்தால் ஹோட்டல் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் ஹைதராபாத்தில் இதேபோல 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் கொலை: மியாபூரில் மருத்துவ மாணவி மியாபூர் பகுதியில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ரூம் நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. அறையின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, 27 வயதான மருத்துவ மாணவியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அந்த பெண்ணுக்கு சமூக வலைத்தளம் மூலம் ரவி குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். குடும்பத்தில் அவசர தேவை இருப்பதாக கூறி ரவி, அந்த பெண்ணிடம் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை வாங்கியுள்ளார். விரைவில் அவற்றை திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். பொருட்களை திருப்பி தருமாறு அந்த பெண் நெருக்கடி கொடுத்துள்ளார். ஹைதராபாத் வந்தால் நகைகளை திருப்பித் தருவதாக கூறிய ரவி, அந்த பெண்ணை ஹைதராபாாத் வரவழைத்துள்ளார்.
இதையடுத்து செப்டம்பர் 30ம் தேதி இருவரும் ஹோட்டலில் அறை எடுத்துள்ளனர். பின்னர் ரவி மட்டும் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அந்த பெண்ணுக்கு தந்தை கால் செய்த போது சுவிட்ச் ஆஃப்பில் இருந்துள்ளது. இரவு ஆகியும் விடுதிக்கு திரும்பாததால் நண்பர்களும் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. செல்போனின் இருப்பிடத்தை வைத்து போலீசார் ஹோட்டலை அடையாளம் கண்டனர். அப்போது தான் அங்கு அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டாவது கொலை: போலி அடையாள அட்டை செப்டம்பர் 29ம் தேதி எஸ்ஆர் நகரில் உள்ள ஹோட்டல் அறையில் 34 வயதான பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் தனது ஆண் நண்பரான சீனிவாஸ் என்பவருடன் ஹோட்டலில் தங்கியிருந்தார். சீனிவாஸ் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி ரூம் புக் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவரும் விகாராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஹைதராபாத்தில் வேலை செய்து வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை
3.30 மணியளவில் சீனிவாஸ் மட்டும் தனது பையுடன் ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர், அந்த பெண் எப்போது செக் அவுட் செய்வார் என்று கேட்டுள்ளார். அவர் காலையில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு செக் அவுட் செய்வார் என்று சீனிவாஸ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் பிற்பகல் வரை அந்த பெண் அறையை விட்டு வெளியே வரவில்லை. கதவை தட்டியும் எந்தவொரு ரெஸ்பான்ஸும் இல்லை என்பதால் ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தலையில் ஏதோ பொருளை வைத்து தாக்கி சீனிவாஸ் அவரை கொன்றுள்ளார். இருவருக்கும் இரவில் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சாப்பிட்டு கொண்டிருந்தபோது அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தெலுங்கு சினிமாவில் சிறு சிறு வேலைகளை செய்து வந்த சீனிவாஸ் இப்போது தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மூன்றாவது கொலை: திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தாக்குதல் 29 வயதான பெண் ஒருவரும் அவரது ஆண் நண்பரும் கோத்தகுடாவில் கடந்த செப்டம்பர் 21மே தேதி ஹோட்டலில் தங்கியுள்ளனர். ஜார்க்கண்ட்டை சேர்ந்த அந்த பெண்ணும், ஆந்திர பிரதேசத்தின் அனகாப்பள்ளியை சேர்ந்த ரவி தேஜாவும் ஹோட்டலில் அறை எடுத்துள்ளனர்.
செப்டம்பர் 22ம் தேதி காலை அந்த பெண் மயங்கி கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் ரவி கூறியுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரவி அங்கிருந்து தப்பி சென்றதாக போலீசார் கூறினர். பெண்ணின் தலையின் பின்பகுதி மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தன.
விசாகப்பட்டினத்திற்கு தப்பி சென்ற ரவி, அங்கு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை தாக்கியதாக ரவி கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது தான் மதுபோதையில் இருந்ததால் என்ன நடந்தது என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் தூங்கிவிட்டதாகவும், விழித்தபோது அந்த பெண் உயிரிழந்து கிடந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
எச்சரிக்கை தொடர்ச்சியாக 3 பெண்கள் ஹோட்டல் அறைகளில் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு போலீசார் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். ஆண் பெண் ஜோடியாக ரூம் எடுத்து தங்கும்போது, அவர்களில் ஒருவர் மட்டும் வெளியேறினால், மற்றவர் பாதுகாப்பாக இருப்பதை ஹோட்டல் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ரூம்களை முன்பதிவு செய்யும்போது போலி அடையாள அட்டைகளை தருகிறார்களா என்பது குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.



