தீ விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ள சம்பவம்

கொழும்பு கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இன்று (19) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ள சம்பவம் நச்சுப் புகையைச் சுவாசித்தமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த அனர்த்தத்தில், மின்சார உபகரண விற்பனை நிலையத்தை நடத்தி வந்த நாரத சந்தருவன் (35), அவரது மனைவி லக்ஷிகா மதுஷானி (28) மற்றும் அவர்களது இரண்டு பெண் பிள்ளைகளான திலேனி ஹசன்யா (5), ஒனேலி பஹன்யா (2) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மூச்சுத்திணறல்
குறித்த கட்டடத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸாரும் கோட்டை தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், கட்டடத்தின் மேல் மாடியைச் சோதனையிட்ட தீயணைப்புப் படையினர், அங்கிருந்த கட்டிலில் நால்வரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், கடந்த சில நாட்களாகக் குறித்த கட்டடத்தின் மேல் மாடியிலுள்ள பின்புற அறையில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த மேல் மாடியின் வெளியேறும் கதவு திறக்க முடியாத வகையில் முழுமையாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின் கசிவு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த நால்வரின் சடலங்களும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தைத் தடயவியல் பொலிஸார் (SOCO) மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கடுவலை நீதவானும் இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.