பிறவி கண் பாதிப்பு சிகிச்சை

 

பிறந்த பச்சிளம் குழந்தைகள் அழுதிடும் போது அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் எனும் திரவம் இயல்பாக வெளியேற வேண்டும். ஆனால் சில பிள்ளைகளுக்கு இவை இயல்பாக வெளியேறாமல் கண்களிலேயே தேக்கமடைந்துவிடும்.

இத்தகைய பாதிப்பை வைத்தியர்கள் கண்ணீர் குழாய் அடைப்பு என பெயரிட்டு, அதற்கு உரிய சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணம் வழங்குகிறார்கள். இதனை மருத்துவமொழியில் ‘கான்ஜிநட்டல் நாசோகிரைமல் டக்ட் அப்ஸ்ட்ரக்ஷன்’ என குறிப்பிடுவர்.

சில பிள்ளைகள் பிறந்து சில மாதங்களுக்கு பின்னரும் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது அல்லது கண்கள் கலங்கி இருப்பது அல்லது கண் இமைகளின் ஓரப்பகுதியில் பசை போல் மஞ்சள் வண்ணத்திலான கசிவு தேங்கி இருப்பது, கண்ணின் ஓரத்தில் சிறிய அளவிலான வீக்கம் இருப்பது ஆகியவை இத்தகைய பாதிப்பின் அறிகுறிகளாக அவதானிக்கலாம்.

பொதுவாக தாயின் கருப்பையில் சிசு வளரும் தருணத்தில் கண்ணீர் குழாயின் இறுதி பகுதியில் உள்ள ஒரு மெல்லிய சவ்வு இயல்பாக இயங்காமல் இருப்பதே இத்தகைய பாதிப்பின் முதன்மையான காரணமாகும். இதனால் சில பிள்ளைகளுக்கு கண்ணீர் கண்களிலேயே தேங்கி வெளியேறும்.

பொதுவாக இத்தகைய பாதிப்பிற்கு 90 சதவீதம் தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளின் கண் பகுதியில் வைத்தியர்களின் அறிவுரைப்படி மென்மையான முறையில் மசாஜ் செய்வதன் மூலம் இத்தகைய அடைப்பு இயல்பாக நீங்கிவிடும். சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பில் தொற்று உண்டாகும். அவர்களுக்கு வைத்தியர்கள் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள்.

இதில் மிக அரிதாக ஒரு வயதை கடந்த பிறகும் சில பிள்ளைகளுக்கு இத்தகைய கண்ணீர் வடிக்குழாய் அடைப்பு பாதிப்பு நீங்கவில்லை என்றால், வைத்தியர்கள் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதனை சீர்படுத்தி, முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.