லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் பொறுப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனபலய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொழும்பு, பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் புதன்கிழமை(30) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
2011ஆம் ஆண்டு லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். அந்தக் காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்தார்.
லலித் மற்றும் குகன் ஆகியோரின் உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து, நீண்டகாலமாக நீதியை கோரி வருகின்றனர். எனினும், பல வருடங்களாக இந்த வழக்கு உரிய முறையில் முன்னோக்கிச் செல்லவில்லை.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே இந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று கோட்டாபய ராஜபக்ஷ இணையவழி முறையில் நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியுள்ளார். அவரிடம் லலித்-குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் என்பதால் பல விடயங்கள் தனக்கு நினைவில் இல்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது தான் கொள்கைகளை வகுப்பது மற்றும் அவற்றை உரிய நிறுவனங்களுக்கு அறிவிப்பது போன்ற பணிகளை மாத்திரமே மேற்கொண்டதாகவும், தரைமட்ட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பவர் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கியமான அதிகாரம் கொண்ட பதவியை வகிப்பவர். இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள் தொடர்பில் உயர்மட்ட பொறுப்பு அந்தப் பதவியுடன் தொடர்புபட்டுள்ளது.
எனவே, லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
லலித்-குகன் வழக்கு மாத்திரமன்றி, அந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டதாகவும், காணாமலாக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் முழுமையான விசாரணை அவசியமாகும்.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பல வருடங்களாக உண்மையை அறிந்து கொள்வதற்காகவும் நீதியை பெற்றுக்கொள்வதற்காகவும் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்படுவதுடன், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ குற்றவாளி என முன்கூட்டியே தீர்மானிப்பது அல்ல எமது நோக்கம். மாறாக, சம்பவம் தொடர்பில் அவரிடம் உள்ள தகவல்கள் முழுமையாகப் பெறப்பட்டு, நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும்.
லலித் மற்றும் குகன் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மை வெளிப்படுத்தப்படுவது அவர்களது குடும்பங்களுக்கு மாத்திரமன்றி, காணாமலாக்கப்பட்ட அனைத்து நபர்களின் குடும்பங்களுக்கும் முக்கியமானதாகும். எனவே, இந்த வழக்கு எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, நீதியான முடிவொன்று வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



