தனது தனிப்பட்ட காதல் வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவி வரும் எல்லைமீறிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ அல்லது விளக்கம் அளிக்கவோ போவதில்லை என்று ஹாலிவுட் நடிகை டகோட்டா ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நடிகையான டகோட்டா ஜான்சன் (35), உலகளவில் வசூலை வாரிக்குவித்த ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே’ திரைப்பட வரிசையின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்துள்ளார். இவர் ஏற்கனவே பிரபல இசைக்கலைஞர் கிறிஸ் மார்ட்டினை காதலித்து பிரிந்த நிலையில், சமீபத்தில் டக்கர் பில்ஸ்பரியை பிரிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மெஷின் கன் கெல்லியுடன் தொடர்பில் இருப்பதாகவும் இணையதளங்களில் அடுக்கடுக்கான கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ள டகோட்டா ஜான்சன், ‘எனது மேலாளர் அல்லது வழக்கறிஞருடன் இரவு உணவிற்குச் சென்றால் கூட, ‘மர்ம நபருடன் நடிகை’ என உண்மைக்கு புறம்பாக எழுதுகிறார்கள்; மக்கள் எதை நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் நம்புவார்கள். அதற்காக ஒவ்வொரு முறையும் வாதாடி போராடுவதற்கு எனது உடம்பில் தெம்பு இல்லை என்பதால், எனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டேன். மேலும் சமூக வலைதளங்களை விட்டு முழுமையாக விலகிவிட்டேன். தேவையற்ற வீண் வதந்திகளைப் புறந்தள்ளிவிட்டு எனது நடிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன்’ என்று உறுதிபடத் தெரிவித்தார்.



