.
தெய்வங்கள் என்பது நமது விருப்பப்படி ஆவாகணம் (எழுந்தருளுதல்) ஆவதில்லை. ஒரு இடத்தின் சக்தியின் வெளிப்பாடாக பார்ப்போமானால் நமது கால ஓட்டத்திற்கு பிறகும் அந்த சக்தியானது இங்கே காலத்தை கடந்து நிலைத்திருக்கும். அந்த சக்தியானது நம்மை காக்குமேயானால் அது மனிதத்தை காக்க உருவானது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறே, இப்பூமியில் காளியானவள் தீயவைகளை அழிக்க தீய சக்திகளை எதிர்க்க உருவெடுத்த உக்ர சக்தியாக நம் முன்னோர்கள் வழிகாட்டினார்கள். தீயவைகளை களைவதற்கு உண்டான தேவதையாக இன்னும் பல தலைமுறைகளை வாழவைத்துக்கொண்டிருக்கிறாள். அவ்வாறே, மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மனை அறிவோமா!
தலவரலாறு
புராணத்தின்படி, மகிஷாசூரனை அழிக்க அம்பாள் சிவனை வேண்டித் தவம் செய்தாள். பின்பு, மிகுந்த வரம் பெற்றசூரனை அழித்தாள் அம்பிகை. அம்பிகை இங்குள்ள வனத்தில் விஷ்வரூபத்துடன் தவம் செய்ததால் வனபத்ரகாளி எனப் பெயர் பெற்றது.
மந்திரம், மாந்த்ரீகம், சூழ்ச்சி ஆகியவற்றால் மகா கொடுமையான ஆட்சியை ஆரவல்லி, சூரவல்லி என்ற பெண்கள் ஆட்சி செய்துவந்தனர். அவர்கள் சாமராஜ்யத்தை துவம்சம் செய்வதற்காக பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் யுத்தம் செய்ய அவன் சிறைப்பட்டான். பீமனை தனது சக்தியால் கிருஷ்ணர் காப்பாற்றினார்.
பின்னர், இந்த ஆரவல்லி, சூரவல்லி பெண்களை அடக்க பஞ்ச பாண்டவர்கள் அல்லிமுத்துவை அனுப்பிவைத்தனர். ஆனால், இந்த ஆரவல்லி, சூரவல்லிப் பெண்கள் தங்களின் தங்கையை அல்லிமுத்துவிற்கு விவாகம் செய்வித்து பின்பு, விஷம் கொடுத்து சூழ்ச்சியாகக் கொலைசெய்தனர்.
இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லிமுத்துவை மீட்டான். பின்பு நடந்த விஷயங்களை கேள்விப்பட்டு ஆரவல்லி, சூரவல்லி பெண்களை போரிட செல்லும் வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு, பின்பு அந்த சாம்ராஜ்யத்தை அழித்தான் என்று சொல்கிறது வரலாறு.
தலத்தின் சிறப்புகள்
*இங்குள்ள பவானி ஆற்றின் தீர்த்தம் மிகவும் சிறப்பானது. வீட்டிற்கு எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்விப்பது சிறப்பாகும்.
*இங்கு செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை, அமாவாசை, பௌர்ணமி, ஆடிமாத வழிபாடு மிகவும் சிறப்பு பெறுகின்றன.
*ஆடிமாதத்தில் நடைபெறும் ஆடிகுண்டம் என்ற தீமிதி திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது.
*இங்கு அம்மன் உக்கிரமாக காட்சி தருகிறாள்.
*இந்த தலத்தின் விருட்சம் தொரத்தி மரமாகும். பெண்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டும் பழக்கம் வழக்கமாக உள்ளது.
*இங்குள்ள கோயிலில் பூ போட்டு ஆருடம் பார்க்கும் வழக்கம் உள்ளது. வாழ்வில் சில காரியங்களை செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் தருணத்தில். சிவப்புப் பூ ஒரு பொட்டலத்திலும், வெள்ளை பூ ஒரு பொட்டலத்திலும் போட்டு முடிவெடுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனை அம்பாளின் முடிவுகேட்டு தீர்வுக்கு வருகின்றனர்.
*இங்கு கிடா வெட்டும் பழக்கம் வழக்கமாக உள்ளது. ஞாயிறு, செவ்வாய், புதன் நாட்களில் வெட்டுகின்றனர். சிலர் இதை நேர்த்தித் கடனாகவே தொடர்ந்து செய்யும் பழக்கம் உள்ளது.
*வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் சனிக்கிழமை ராகு காலத்திலும் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.
ஜோதிடப்படி யார் யாருக்கு தீர்வுகள் கிடைக்கும்
*ஜாதகத்தில் ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.
*சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது.
*யாரேனும் நமக்கு செய்வினை செய்துள்ளார்கள் என்று நம்புகின்றவர்களும், மிகுந்த கஷ்டத்தில் இருப்பவர்களும் நம்பிக்கையுடன் வந்து வழிபடலாம்.
*மீனம் மற்றும் மேஷம் ராசி லக்னக்காரர்களுக்கும் சிறந்த நன்மையை தரும் திருக்கோயிலாகும்.
*வெளிநாடு சென்று பிரச்னைக்கு ஆளானவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பமுடியாதவர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டால் நல்ல தீர்வுகள் உண்டாகும்.
* சிம்ம லக்னம் மற்றும் ராசிக்காரர்கள் சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது சிறந்த நன்மையை அளிக்கும்.
*ஏதேனும் தானம் தருகிறேன் என வேண்டி பிரார்த்திப்பவர்களுக்கு உடன் சிறந்த நற்பலன்களைத் தரவல்லது இந்த திருக்கோயில்.
*சிலருக்கு தொலைந்த பொருளை மீட்டுத்தரும் திருத்தலமாக உள்ளது. இந்த திருக்கோயில்.
*கால்களில் அடிக்கடி அடிப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள். காலில் ஆறாத புண்கள் உடையவர்களுக்கு இந்த கோயில் சிறந்த பரிகாரத்தலம்.
*ஜாதகத்தில் குருவுடன் – ராகு இணைந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிச் செல்லும் வாய்ப்புண்டு. அவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறந்த தீர்வு கொடுக்கும் திருத்தலம்.
எப்படிச் செல்வது?
கோவை சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லலாம்.மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது.



