
ஹஸ்த நட்சத்திரத்தைப் பற்றிப் பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது மனிதனின் கை.
எண்ணம் மனதில் தோன்றுகிறது. அந்த எண்ணத்தைச் செயலாக மாற்றுவது கை. ஒரு பொருளை உருவாக்குவது, எழுதுவது, வரைவது, பிறருக்கு உதவுவது, கலைத்திறனை வெளிப்படுத்துவது என மனித வாழ்க்கையின் பல செயல்களுக்கும் ‘‘கை’’தான் கருவி யாக இருக்கிறது.
இதனால்தான் ஹஸ்த நட்சத்திரத்திற்கு கை அடையாளமாகக் கூறப்படுகிறது. ஹஸ்தம் என்பது 27 நட்சத்திரங்களில் பதின்மூன்றாவது நட்சத்திரம். கன்னி ராசியில் 10 பாகை முதல் 23 பாகை 20 கலை வரை பரவியுள்ளது. இதன் நட்சத்திர அதிபதி சந்திரன். இது அமைந்துள்ள கன்னி ராசியின் அதிபதி புதன்.
எனவே ஹஸ்தத்தின் இயல்பைப் புரிந்துகொள்ள சந்திரன், புதன் ஆகிய இரு கிரகங்களின் தன்மைகளையும் இணைத்துப் பார்க்க வேண்டும். நட்சத்திர அதிபதியான சந்திரன் மனம், கற்பனை, உணர்வு, நினைவாற்றல் ஆகியவற்றைக் குறிக்கிறார். கன்னி ராசியின் அதிபதியான புதன் அறிவு, பேச்சுத்திறன், கணிதம், வணிகம், ஆராய்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறார். எனவே மனதில் தோன்றும் எண்ணத்தை அறிவின் துணையுடன் செயலாக்கும் திறன் ஹஸ்தத்திற்கு உண்டு.
ஹஸ்த நட்சத்திரக் குணங்கள்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பும் செயல்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். . ஒரு வேலையை எப்படிச் செய்து முடிக்கவேண்டும் என்பதை விரைவாகப் புரிந்துகொள்வார்கள். நகைச்சுவை உணர்வு, பேச்சாற்றல், பிறருடன் பழகும் திறன் ஆகியவை இருக்கும். கைகளால் செய்யும் வேலைகளில் தனித் திறமை வெளிப்படலாம்.
அதே நேரத்தில் சிறிய விஷயங்களைக்கூட அதிகமாகச் சிந்திப்பது, எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவது, மனதில் பட்டதை உடனே வெளிப்ப டுத்துவது போன்ற குறைகளும் ஏற்படலாம். .
ஹஸ்த நட்சத்திரத்தின் காரகங்கள் ஹஸ்தத்தின் முக்கிய அடையாளம் கை. எனவே கைவினை, எழுத்து, ஓவியம், சிற்பம், இசைக்கருவி வாசித்தல், மருத்துவம், அறுவை சிகிச்சை, மசாஜ், சமையல் போன்ற கைகளின் திறமையை வெளிப்படுத்தும் செயல்கள் ஹஸ்த நட்சத்திரத்தின் சில காரகங்கள். கை என்பது உழைப்பின் அடையாளம் மட்டுமல்ல. கொடுப்பது, பெறுவது, உதவுவது, உருவாக்குவது, பாதுகாப்பது ஆகியவற்றுக்கும் அடையாளம்.
மலர், விருட்சம், தேவதை
ஹஸ்த நட்சத்திரத்திற்குரிய மலராக மல்லிகை குறிப்பிடப்படுகிறது. இதன் நறுமணம், மென்மை, தூய்மை ஆகியவை சந்திரனின் இயல்புடன் ஒப்பிடப்படுகின்றன. நட்சத்திர விருட்சமாக ஆத்திமரம் உள்ளது. ஹஸ்தத்தின் அதிதேவதை சவிதா அல்லது சவித்ரு எனப்படும் சூரிய தேவன். காயத்ரி மந்திரத்தில் போற்றப்படும் சவித்ரு, உயிர்களை இயக்கும் படைப்பாற்றலின் வடிவமாகக்
கருதப்படுகிறார்.
ஹஸ்த நட்சத்திரத்தின் பலம்
ஹஸ்த நட்சத்திரத்திற்கு உரிய சக்தி ‘ஹஸ்த ஸ்தாபனீய ஆகம சக்தி’ என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் நாம் விரும்புவதை அடைந்து அதை நம் கையில் கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் என்பதாகும்.
எண்ணத்தில் உருவானதைச் செயல்படுத்தி, ஒரு பொருளாகவோ சாதனையாகவோ மாற்றும் திறன் இதன் அடிப்படை. முயற்சியைச் செயலாக்கும் திறனும், எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும் இதன் முக்கிய பலமாகக் கருதப்படுகின்றன.
ஹஸ்த நட்சத்திரக்காரர்களின் முக்கிய பலம் எதையும் விரைவாகக் கற்றுக்கொண்டு செயல்படுத்தும் திறன். பிறர் தயங்கும் வேலை யைக்கூட இவர்கள் துணிந்து செய்து முடிக்கலாம். சிறிய விஷயங்களையும் கவனித்து ஆராயும் தன்மை இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள்.
கவனம் செலுத்த வேண்டியவை
சந்திரன் நட்சத்திர அதிபதியாக இருப்பதால் மனம் அடிக்கடி மாறுவது, உணர்ச்சி வசப்படுவது போன்ற இயல்புகள் ஏற்படலாம். புதன் ஆதிக்கம் காரணமாக எல்லாவற்றையும் ஆராய்ந்துகொண்டே இருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம். தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் காரியத்தை முடிக்க நினைக்கும் போக்கும் வரலாம்.
என்ன படிப்பு படிக்கலாம்?
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அறிவியல், கணிதம், கணினி, வணிகவியல், கணக்கியல் போன்ற பாடங்களில் ஆர்வமும் திறமையும் இருக்கலாம். சந்திரன் கற்பனைத் திறனையும் புதன் பகுத்தறிவையும் குறிப்பதால் எழுத்து, மொழி, ஊடகம், வடிவமைப்பு, ஓவியம் போன்ற துறைகளும் பொருத்தமாக அமையலாம்.
என்ன வேலை செய்யலாம்?
மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், பல் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், கணினி வல்லுநர்கள், பொறியாளர்கள், கணக் காளர்கள் போன்ற பணிகளில் ஈடுபடலாம். ஓவியர், சிற்பி, தையல் கலைஞர், சமையல் கலைஞர், நகை வடிவமைப்பாளர், கைவினைக் கலைஞர் போன்ற தொழில்களும் பொருந்தும். பேச்சாற்றல், வணிக அறிவு இருப்பதால் விற்பனை, சந்தைப்படுத்துதல், வங்கிப் பணி, பத்திரிகைத்துறை ஆகியவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.
பரிகாரக் கோயில்
ஹஸ்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் என்பதால் சந்திர பரிகாரத் தலமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். ஹஸ்த நட்சத்திரத்திற்குரிய தலமாக திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோயிலும் குறிப்பிடப்படுகிறது.
என்ன பரிகாரம் செய்யலாம்?
ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை சந்திர பகவானை மனதில் நினைத்து வழிபடலாம். சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் சிறப்பு. சவித்ரு தேவதையைப் போற்றும் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். தாயாருக்கு மரியாதை செலுத்துவது, தாயில்லாத குழந்தைகளுக்கு உதவுவது, ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற நற்செயல்களையும் பரிகாரமாகக் கொள்ளலாம். மல்லிகை மலரால் இறைவனை அர்ச்சிப்பதும், ஹஸ்த நட்சத்திர நாளில் ஆத்தி மரத்தைப் பாதுகாத்து வளர்ப்பதும் நல்ல வழிபாட்டு முறைகளாகும்.
ஹஸ்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள்
ஹஸ்த நட்சத்திரம் நான்கு பாதங்களைக் கொண்டது. முதல் பாதம் மேஷ நவாம்சத்திலும், இரண்டாம் பாதம் ரிஷப நவாம்சத்திலும், மூன்றாம் பாதம் மிதுன நவாம்சத்திலும், நான்காம் பாதம் கடக நவாம்சத்திலும் அமைகின்றன. இதனால் ஒரே ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடமும் குண வேறுபாடுகள் காணப்படலாம்.
முதல் பாதத்தில் செயல்துடிப்பும் துணிச்சலும், இரண்டாம் பாதத்தில் கலை மற்றும் பொருளாதார நாட்டமும், மூன்றாம் பாதத்தில் அறிவு மற்றும் பேச்சாற்றலும், நான்காம் பாதத்தில் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையும் வெளிப்படலாம் இவற்றை லக்னம், நவாம்சம், கிரகப்பலம் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
கை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, கொடுப்பதற்கும் உரியது. உருவாக்குவதற்கு மட்டுமல்ல, உதவுவதற்கும் உரியது. தன்னுடைய திறமையால் சம்பாதிப்பதுடன், பிறருக்கும் பயன்படும் வகையில் வாழ்வதே ஹஸ்த நட்சத்திரத்தின் உயர்ந்த செய்தியாகக் கொள்ளலாம்.



