மாங்காடு அருகே காதலிக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை காதலன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம், ராஜ் நகரை சேர்ந்தவர் யுவனேஷ்(20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த இளம் பெண் யுவனேஷின் சிறு வயது பள்ளி நண்பரான கொழுமணிவாக்கம், தோப்பு தெருவைச் சேர்ந்த விக்கியை(20), காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம் யுவனேஷிற்கு தெரியவரவே தான் ஒரு தலையாக காதலித்து வந்த அந்த இளம்பெண் தன்னை காதலிக்காமல் தனது நண்பனை காதலித்ததால் அவர் மீது ஆத்திரமடைந்தார். இதனால் அந்த இளம்பெண்ணை பழி வாங்குவதற்காக தினமும் இரவு நேரத்தில் தனது செல்போனில் இருந்து அந்த இளம்பெண்ணின் செல்போனிற்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இளம்பெண், தனது காதலன் விக்கியிடம் நடந்தவற்றை சொல்லி அழுதாராம். இது விக்கிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தான் காதலிக்கும் பெண் என தெரிந்தும் இது போல் ஆபாச வீடியோ அனுப்பும் யுவனேஷை உயிருடன் விடக் கூடாது என முடிவு செய்தாராம்.
இதையடுத்து நேற்று தனது மற்றொரு நண்பனான மாங்காடு, சீனிவாச நகர் 3- வது தெருவை சேர்ந்த பார்த்திபன்(26), என்பவரை அழைத்துக் கொண்டு, யுவனேஷை மது அருந்த கொழுமணிவாக்கத்தில் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து யுவனேஷிற்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து குடிக்க வைத்தனர். பின்னர் போதை தலைக்கேறி யுவனேஷ் தள்ளாடிய போது, “எனது காதலிக்கு நீ ஏன்டா ஆபாச மெசேஜ் அனுப்புறே, அவள் உன்னை காதலிக்கவில்லைதானே? பிறகு ஏன் இப்படி செய்தாய்?” என கேட்ட போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாம்.
அப்போது விக்கியும், பார்த்திபனும் சேர்ந்து யுவனேஷை அருகில் கிடந்த பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த யுவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கொலைச் சம்பவம் நடந்தது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக இருவரும் சேர்ந்து யுவனேஷ் உடலை பெரிய கல்லை கட்டி கயிறு மூலம் உடலை பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு வெகுநேரமாகியும் யுவனேஷ் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள்,
தேடத் தொடங்கினர். இதனால் பயந்து போன கொலையாளிகள் இருவரும், எப்படியும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து நேற்று இரவு மாங்காடு காவல் நிலையத்தில் சரணடைந்து, நடந்த உண்மையை போலீசாரிடம் கூறினர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு கொலையாளிகள் இருவரும் சுட்டிக் காட்டிய பாழுங்கிணற்றில் இருந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் யுவனேஷ் உடலை போலீசார் மீட்டனர். பின்னர், அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விக்கி மற்றும் பார்த்திபன் ஆகிய இருவர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, நிஜமாகவே காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதால் யுவனேஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்த பள்ளி நண்பனை கொடூரமாக அடித்து கொலை செய்து, பாழுங்கிணற்றில் உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



