அரசாங்கம் பயங்கரவாத அடக்குமுறைஉடனடியாகக் கைவிட வேண்டும்

x

அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகக் கூறிக்கொண்டு, அதைவிடவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டமூலத்தை கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், பயங்கரவாத அடக்குமுறைச் சட்டங்களை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி நுவான் போபகே சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு பொது நூலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (25) , ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்! பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தைத் திரும்பப் பெறு!’ என்ற தொனிப்பொருளில் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது, நாங்கள் மிகவும் நல்லவர்கள், மிகவும் ஜனநாயகவாதிகள் என்று கூறியது. கடந்த அரசாங்கங்கள் நிறைவேற்றிய அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்வதுடன், நாட்டில் நிலவிய ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முழுமையாக இல்லாதொழிப்பதாகவும் மக்களுக்கு வாக்குறுதியளித்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னரே அந்த வாக்குறுதிகளை மறந்து ஜனநாயகத்துக்கு எதிரான பாதையில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமான நிலைமையாகும்.

அரசாங்கம் தனக்கு தேவையான பிரதம நீதியரசரை தொடர்ந்து பதவியில் வைத்திருப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தமொன்றை கொண்டு வந்துள்ளது. மக்கள் எதிர்ப்பைக்கூட கருத்திற்கொள்ளாமல் அந்தத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

மறுபுறத்தில், பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் என்ற பெயரில் மிகவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டமூலமொன்றை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையே பாதிக்கப்படும்.

அரசாங்கம் இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்று யாரும் அழுத்தம் கொடுக்க முடியாத நிலை உருவாகும். அவ்வாறு அழுத்தம் கொடுத்தால் அது பயங்கரவாதச் செயற்பாடாகக் கருதப்படக்கூடிய நிலை ஏற்படும்.

ஆர்ப்பாட்டம் செய்வதும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், இந்தப் புதிய சட்டமூலத்தின் கீழ் பொலிஸார் கூறும் விதத்திலேயே ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இல்லாவிட்டால் அந்த ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு கிடைக்கும்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையிலேயே தொடர்ந்து பயணிக்கிறது. பெரும் செல்வந்தர்களுக்கு சலுகைகளை வழங்கிக்கொண்டே சாதாரண மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்துகிறது. இந்தக் கொள்கைக்கு எதிராகப் போராடுபவர்களின் வாயடைப்பதற்கே இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படும். இதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கங்களும் இதே முயற்சியை மேற்கொண்டன. ஆனால், மக்கள் எதிர்ப்பின் காரணமாக அந்த அடக்குமுறைச் சட்டங்களை பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வடக்கிலும் தெற்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரச பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். அந்தச் சட்டத்தின் பிரதான பாதிக்கப்பட்ட தரப்புகளில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றாக இருந்தது. அவ்வாறு பாதிக்கப்பட்ட கட்சியொன்று இன்று ஆட்சிக்கு வந்து அதைவிடவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டமூலத்தை கொண்டு வருவது மிகவும் வெறுக்கத்தக்க விடயமாகும்.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை மட்டுமன்றி ஊடகச் சுதந்திரம் மற்றும் கலைச் சுதந்திரமும் பாதிக்கப்படும். எனவே, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆகிய அடக்குமுறைச் சட்டங்களை இல்லாதொழிக்க வேண்டும். இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் எந்தவித நிபந்தனையும் இன்றி ஒன்றிணையுமாறு இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.