தயாசிறி ஜயசேகர, மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படாத சந்தர்ப்பம் வரையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேதமாச தலைமையில் நடைபெறும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கூட்டங்களில் கலந்து கொள்ளாமை தொடர்பில் எனது நிலைப்பாடு என்ற தலைப்பில் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் தங்களது தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் நான் கலந்துகொள்ளாமை தொடர்பான எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் இக்கடிதத்தின் மீது தங்களின் அதீத கவனத்தைக் கோருகிறேன்.
பாராளுமன்றத்தில் தங்களது ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் என்மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு கண்டனத்தையோ அல்லது கருத்தையோ வெளியிடவில்லை.
புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க 2025.10.23 ஆம் திகதி அரசியலமைப்புச் சபையின் உறுப்பினரான சிவஞானம் சிறீதரன்;, தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் அதனை அரசியலமைப்புச் சபைக்குத் தெரிவிக்கத் தவறி, விசாரணையைத் தடுக்க முயன்றார் என்றும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நியமனங்களில் பங்கேற்பதன் மூலம் ‘நலன்சார் முரண்பாட்டை’ ஏற்படுத்தி, பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் நடத்தை விதிகளையும் மீறினார் என்றும் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி பத்மகுமார ஜயசேகர, 2026.01.22ஆம் திகதி, அரசியலமைப்புச் சபையில் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவஞானம் சிறீதரன், ஆளும் கட்சிக்குச் சாதகமாகச் செயற்படுவதாகவும், இராணுவமயமாக்கல் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் உள்ளிட்ட எட்டு முக்கிய சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பூநகரி சூரிய மின்சக்தித் திட்டத்தின் மூலம் சிவஞானம் சிறீதரனின் வங்கிக் கணக்கில் 40மில்லியன் ரூபாயும், அவரது மகனின் வங்கிக் கணக்கில் 30மில்லியன் ரூபாயும், மொத்தமாக 70மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும், இதுதொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், சிவஞானம் சிறீதரன் உடனடியாகத் தனது அரசியலமைப்புச் சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டினை 2025.11.08 ஆம் திகதியும், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி பத்மகுமார ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டினை 2026.01.23 ஆம் திகதியும், பாராளுமன்ற அமர்வில் நான் உரையாற்றும் போது முற்றாக நிராகரித்ததுடன், நான் ஊழலில் ஈடுபட்டேன் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பின், அதனை பாராளுமன்றத்தில் நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுத்திருந்தேன்.
இந்நிலையில், என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தாங்கள் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் கோரவில்லை என்பதுடன், அவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, குறித்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அவர்களிடம் இருப்பின், அவற்றை உரிய முறையில் நிரூபிக்குமாறும், அவ்வாறு ஆதாரங்களை முன்வைக்க முடியாத பட்சத்தில், அவர்கள் காழ்ப்புணர்ச்சிகளில் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுமாறும் வலியுறுத்துங்கள்.
அத்தகைய சந்தர்ப்பம் வரை தங்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்பதை தயவுடன் அறியத்தருகிறேன் என்றுள்ளது.



