சுகாதார அமைச்சு எச்சரிக்கை டெங்கு மரணங்கள் 77 ஆக அதிகரிப்பு:

 

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை மொத்தம் 99,634 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோயாளர் இறப்பு விகிதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது.

மொத்த நோயாளர்களில் 52.53% ஆனோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 52,340 ஆகும்.

மாவட்ட ரீதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,136 ஆகும்.

இதற்கு மேலதிகமாக கொழும்பு: 19,569 நோயாளர்கள், கண்டி: 7,547 நோயாளர்கள்,களுத்துறை: 6,339 நோயாளர்கள், மாத்தறை: 6,273 நோயாளர்கள் மாவட்ட ரீதியில் டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயண வழிகாட்டிகளைப் படி

அதேவேளை, ஜூலை மாதத்திலேயே அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். செப்டம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,144 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.