சாகாவரம் தருமா H2O தண்ணீர்? ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர்ரூ.28,000

நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். ஆனால், `காசின்றி அமையாது அந்தஸ்து’ என்று இன்றைய ஆடம்பர உலகம் அதை மாற்றி எழுதிவிட்டது.

தாகம் எடுத்தால் கடையிலோ, அருகிலிருக்கிற வீட்டிலோ தண்ணீர் வாங்கிக் குடிப்போம். இப்போது இருபது ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாட்டில் வாங்கி `மடக் மடக்’ எனக் குடித்துவிட்டு நகர்வது நம் இயல்பாகிவிட்டது.

ஆனால், நம் செலிபிரிட்டிகள் ரூ.28,000 கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? .
‘பாலிவுட் நடிகை திஷா பதானி ரூ.28,000 மதிப்புள்ள பிளிங் ஹெச்-2ஓ (Bling H2O) தண்ணீரைத்தான் அருந்துகிறார்’ என்று கடந்த வாரம் ஒரு செய்தி பரவியது. உடனே நெட்டிசன்கள் ‘அதென்ன பிளிங் ஹெச்-2ஓ தண்ணீர்?’ என்று அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள். நாமும்தான்..!

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கிரேட் ஸ்மோக்கி மலைகளின் அடிவாரத்தில் அமைந்த இங்கிலீஷ் மவுன்ட்டன் ஊற்றிகளிலிருந்து எடுக்கப்படுகிறது இந்த பிளிங் ஹெச்-2ஓ தண்ணீர்.

ஹாலிவுட் பார்ட்டிகள் முதல் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் முக்கியஸ்தர்கள் வரை பலரும் இந்தத் தண்ணீரைத்தான் வாங்கி அருந்துகிறார்களாம்.

இந்த பிராண்டின் 750 மில்லி தண்ணீரின் ஆரம்பகட்ட விலை 40 முதல் 60 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ₹3,500 – ₹5,500). ஆனால், அவற்றின் பிரத்யேக `லிமிடெட் எடிஷன்’, ஒரிஜினல் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதித்து, கையால் உருவாக்கப்பட்ட விசேஷ பாட்டில்களில் வருவதால் விலை, இந்திய ரூபாயில் ₹25,000 முதல் ₹30,000 வரை விற்கப்படுகிறது. சில கஸ்டமைஸ்டு பாட்டில்கள் லட்சங்கள் வரைக்கும் விலை வைக்கப்படுகின்றன.

என்ன ஸ்பெஷல்?

ஹாலிவுட் எழுத்தாளரும், தயாரிப்பாளருமான கெவின் பாய்ட் (Kevin G. Boyd) என்பவரால் இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டது.

பிரபலங்கள் கையில் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில்களும் அவர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாக மாற வேண்டும் என்பதே அவரது ஐடியா.

ஊற்றிலிருந்து எடுக்கப்படும் அந்த நீர் மைக்ரோ-ஃபில்ட்ரேஷன், ஓசோனேற்றம், புற ஊதாக்கதிர் சிகிச்சை என 9 அடுக்கு சுத்திகரிப்புச் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, pH சமநிலையுடன் பாட்டில்களில் அடைக்கப்படுகிறது.

தண்ணீரின் சுவை மென்மையாகவும் தூய்மையாகவும் இருக்கும் என்பது உண்மை என்றாலும், இந்த அபரிமிதமான விலைக்குக் காரணம் தண்ணீரை நிரப்பும் பாட்டிலின் பிரத்யேக தயாரிப்புதான்.

.
இதனால்தான் ஹாலிவுட்டின் ஆடம்பர பார்ட்டிகள், விருது வழங்கும் விழாக்கள், ரெட் கார்பெட் நிகழ்வுகளில் `பிளிங் ஹெச்-2ஓ’ ஒரு முக்கிய கௌரவப் பொருளாக வலம்வருகிறது.

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி பாரிஸ் ஹில்டன் இந்தத் தண்ணீரின் தீவிர ரசிகை (அவரது செல்ல நாய்கூட இந்த நீரையே குடிப்பதாகச் செய்திகள் உண்டு).

பாப் இசை ராணி மடோனா, ராப் இசைக்கலைஞர் லில் கிம், நடிகர் ஜேமி பாக்ஸ் போன்ற பல பிரபலங்கள் இந்த பிராண்டைப் பயன்படுத்தி பிரபலப்படுத்தி யிருக்கிறார்கள்.

விராட் கோலி போன்ற முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் கையில் `எவியான்’ (Evian – லிட்டருக்கு சுமார் ரூ.600–ரூ.800) என்ற பெயருடைய தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம்.

இந்த நீர் பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உருவாகும் ஒரு இயற்கை ஊற்று நீர். பனி உருகி, பாறைகள், மணல் அடுக்குகளில் இயற்கையாக வடிகட்டப்பட்டு பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படுகிறது என்கிறார்கள்.

`இந்த நீரைக் குடித்தால் ஆயுள் கூடிவிடுமா?’ என்றால், மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் “நிச்சயமாக இல்லை” என்கிறார்கள். “சுத்தமான ஊற்று நீரில் உடலுக்குத் தேவையான மக்னீசியம், கால்சியம் போன்ற இயற்கை தாதுக்கள் சமநிலையில் இருக்கும்.

ஆனால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, ஆரோக்கியத்தைப் பெற சரியான முறையில் வடிகட்டப்பட்ட சாதாரணக் குடிநீரே போதுமானது” என்கிறார்கள்.

சுருக்கமாகப் பார்த்தால் விஷயம் இவ்வளவுதான்… ஊற்று நீரோ, மண்பானைத் தண்ணீரோ… தாகத்துக்கு அள்ளிப் பருகும்போது கிடைக்கிற சுகமும் மனநிறைவும் உலகத்தில் இருக்கும் எல்லா விலையுயர்ந்த விஷயங்களைவிடவும் மதிப்புமிக்கதுதான். தாகம் எடுத்தா தண்ணி குடிப்போம் பாஸ்… பாட்டில் பளபளப்பா இருக்கான்னு பார்க்க வேண்டாம்..