“
“தியாக தீபம்” திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று (25) உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், இராமநாதன் காண்பியக்கலை பீட மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டனர்.
மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவை அர்த்தமுள்ள வகையில் நினைவுகூரும் நோக்கில் இந்த நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது தியாக தீபத்தின் நினைவைப் பகிரும் கருத்துரை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் திலீபனின் தியாகத்தையும் அவரது ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் நினைவுகூர்ந்ததுடன், சமூக நலனுக்காக தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.



