தென் ஆபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணத்தில் உள்ள டர்பன் நகருக்கு அருகில் அமைந்துள்ள ‘குவாமாகுதா’ பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட 14 பேர் மீதே மூன்று துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளது.
இதன்போது, சம்பவம் இடத்திலேயே 10 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த நான்கு நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. எஞ்சிய மூவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 13 ஆண்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தப்பியோடும் முன் அங்கிருந்த நபருக்குச் சொந்தமான வாகனத்திற்குத் தீவைத்து எரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், குற்றவியல் குழுக்களுக்கு இடையேயான பகையே இதன் பின்னணியாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்களில் சிலர் குற்றவியல் உளவுத்துறைப் பிரிவின் கண்காணிப்பில் இருந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்யப் பொலிஸார் தீவிர மனிதவேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
தென் ஆபிரிக்கா உலகில் மிக அதிகக் கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த அண்மையில் அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோசா இராணுவத்தை பொலிஸாருக்குத் துணையாக இறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



