
ரஷ்யாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போரில், மனிதர்களின் நேரடிப் பங்கேற்பு இல்லாமல் 28 தரைவழி ரோபோக்களைக் (UGV) கொண்டு உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகருக்கு அருகே இந்த முன்மாதிரியற்ற தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தரைவழியாகச் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ரோபோக்கள் ஒரே படைப்பிரிவாகப் பயன்படுத்தப்பட்டது போரின் புதிய பரிமாணத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் 8 காமிகேஸ் தரைவழி ட்ரோன்கள், தானியங்கி ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 18 ரோபோக்கள் மற்றும் பிற வெடிபொருள் தாங்கிய ரோபோக்கள் பங்கேற்றன. நிலப்பரப்பில் தரைவழி ரோபோக்கள் மூலம் தாக்குதல் நடத்துவது வீரர்களின் உயிர் இழப்பைக் கணிசமாகக் குறைப்பதாக உக்ரைன் பாதுகாப்புத் தரப்பு கருதுகிறது. ரஷ்ய ராணுவ எப்.பி.வி (FPV) ட்ரோன் இயக்கிகள் இந்தத் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், போரின் வரலாற்றிலேயே இதுவே தரைவழி ரோபோக்கள் நேரடியாக மோதிக்கொண்ட மிகப்பெரிய விசுவல் தாக்குதல் என்றும் ரஷ்யத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதர்களின் பயன்பாடின்றித் தொலைதூரத்தில் இருந்து முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட இந்த ரோபோக்களின் தாக்குதல் சர்வதேச ராணுவ வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆபத்தான போர்க்களப் பகுதிகளில் வீரர்களை இறக்குவதற்குப் பதிலாக இத்தகைய தரைவழி ரோபோ அமைப்புகளைப் பயன்படுத்துவது போரின் உத்திகளை மாற்றியமைத்துள்ளது.
தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து இருநாடுகளின் ராணுவ கண்காணிப்பு அமைப்புகளும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.
எதிர்காலப் போர்களில் தரைவழி மற்றும் வான்வழி ட்ரோன்களின் கூட்டு பயன்பாட்டை மேலும் அதிகரிக்க உக்ரைன் திட்டமிட்டு வருகிறது.



