டானா விளைவு காரணமாக ஸ்பெயினில் கொடூர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஸ்பெயினில் உள்ள காஸ்டிலா-லா மஞ்சா பிராந்தியத்தில் மெட்ரிக் குவேராஸ் என்ற சிறிய நகரம் அமைந்திருக்கிறது. 4760 பேர் மட்டுமே வாழும் அந்த சிறிய நகரத்தில் வெள்ளிக்கிழமை அன்று திடீரேன பெருமழை கொட்டித்தீர்த்தது. ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 142லிட்டர் என்ற அளவில் மழை பெய்த நிலையில் சிறிது நேரத்தில் அது பெரு வெள்ளமாக உருவெடுத்து அங்கிருந்து வீடுகளுக்குள் பாய்ந்தது. குறுகிய நேரத்திலேயே நீர்மட்டம் சுமார் 1மீட்டருக்கும் அதிகமான உயரதிற்கு அதிகரித்ததால் வீ டுகளிலிருந்து ஏராளமானோர் தப்பிக்க வழி இல்லாமல் தங்கள் வீடுகளிலேயே சிக்கி கொண்டனர்.
இந்த பெருவெள்ளம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு படையினர் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட் டவர்களை அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்தினர். எனினும் வெள்ளம் காரணமாக வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் வெளியேற முடியாமல் 102 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசு தெரிவித்திருக்கிறது. இதனிடையே அந்த பகுதியில் இருந்த கார்கள் இந்த வெள்ளத்தில் அடித்து மலை போல குவிந்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது
இந்த நகரத்தில் குறைந்த அளவு மக்களே வசித்ததால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் வேறு முக்கிய நகரத்தில் இந்த அளவு மழை பெய்திருந்தால் அது பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். டானா எனப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிகழ்வே இந்த திடீர் பெருமழைக்கு காரணம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டலத்தின் உயர் அடுக்கில் உள்ள குளிர்ந்த காற்று மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் வெப்பமான ஈரப்பதம் மிகுந்த காற்றோடு மோதும்போது நடக்கும் நிகழ்வே டானா விளைவு என்று அழைக்கப்படுகிறது.
ஸ்பெயினில் இந்த நிகழ்வால் இதற்கு முன்னரும் பலமுறை பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஸ்பெயினில் சமீபத்திய கடுமையான கோடை வறட்சி நிலவியதால் நிலம் மிகவும் காய்ந்து கடுமையாக மாறி இருந்தது என்றும் இதனால் தற்பொழுது பேய்த அதிகப்படியான மழைநீரை நிலத்தால் உடனடியாக உறிஞ்ச முடியாமல் நீரெல்லாம் வழிந்தோடி பெரும் வெள்ளப்பெருக்காக மாறியது என்றும் பல ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.



