அமெரிக்க அதிபர் டிரம்பை சுட்டுக்கொல்ல வந்த வெனிசுலா இளைஞர் கைது- காரில் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல்

அமெரிக்க அதிபர் டிரம்பை சுட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகே அதிபர் பாதுகாப்பு பிரிவு போலீசார் வழக்கமான இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கான்ஸ்டிடியூஷன் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த பிக்கப் வாகனத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அந்த வாகனத்தில் இருந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரோனி யோர்ட்ரிக்ஸ் குவானிபா சினோஸ் (26) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். வாகனத்தை சோதனையிட்ட போது அது திருடப்பட்ட கார் என்பது அம்பலமானது. மேலும் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிநவீன ஏஆர்-15 ரக துப்பாக்கி, மெஷின் பிஸ்டல், கைத்துப்பாக்கி ஆகிய 3 பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஏராளமான தோட்டாக்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அந்த குற்றவாளி, தனது மனதில் எழுந்த விசித்திர குரல்கள் அதிபர் டிரம்பை நேரில் சென்று சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டதாக கூறி அதிகாரிகளை அதிரவைத்தார். கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் டெக்சாஸ் எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இந்த நபர் மீது திருட்டு மற்றும் அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்த பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பிரிவு இயக்குனர் சீன் குர்ரன் கூறுகையில், ‘வெள்ளை மாளிகை வளாகத்தை குறிவைத்து ஆயுதங்களுடன் வரும் நபர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது’ என்று தெரிவித்தார்.