ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கினால் டாலர் சேவை ரத்து புதிய தடையை விதித்த அமெரிக்கா

 

ஈரான் நாட்டின் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் உலகளவில் முடக்கும் வகையில் அமெரிக்கா அதிரடி பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. ஈரான் உச்ச தலைவர் மற்றும் முக்கிய ராணுவ தளபதிகள் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே 7 மாதங்களாகப் போர் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், ஈரானின் வான்வழிப் போக்குவரத்தை முற்றிலும் முடக்கும் நோக்கில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில்,

‘ஈரான் நாட்டின் அனைத்து விமான நிறுவனங்களும் உலகம் முழுவதும் இந்த வாரம் முதல் முற்றிலும் முடக்கப்படும்; அந்த விமானங்கள் தரையிறங்கினால் அவற்றுக்கு எரிபொருள், தரைத்தள சேவைகள் வழங்குவதோ அல்லது பயணச்சீட்டு விற்பனை செய்வதோ கூடாது; இதனை மீறும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க டாலர் பணப்பரிவர்த்தனை அமைப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்படும்’ என்று கூறினார்.

அமெரிக்காவின் இந்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈராக் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் ஈரானிய விமானங்களின் வருகையைத் தடை செய்துள்ளன; மேலும் துருக்கி நாட்டின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்கான சேவையை ஈரானின் மஹான் ஏர் நிறுவனம் உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.