அமெரிக்க வெள்ளை மாளிகை தனது யூடியூப் பக்கத்தில் “டிரம்ப் தொலைக்காட்சி” என்ற பெயரில் 24 மணி நேர நேரலை ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் யூடியூப் தளத்தில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், முன்னணி ஊடகங்களான சிஎன்என் (CNN), எம்எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிட்டிகோ (Politico) ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய அண்மையில் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய நேரலை தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் யூடியூப் (YouTube) பக்கத்தில் “24/7 நேரலை” என்ற விளம்பரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்புகள், அதிபரின் உரைகள், கடந்த கால பொது நிகழ்ச்சிகளின் பதிவுகள் மற்றும் சிறப்புக் காணொளிகள் இதில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஒளிபரப்பப்பட்ட முதல் காணொளிகளில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மவுண்ட் ரஷ்மோரில் டிரம்ப் ஆற்றிய உரையும் அடங்கும். இந்த நிகழ்வில், அவர் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற விழா உட்பட, அவரது முந்தைய பொதுத் தோற்றங்களின் காணொளிகளும் இடம்பெற்றன.



