மருத்துவ மாணவி மயக்க ஊசி போட்டு தற்கொலை! சிக்கிய கடிதம்!

 

புதுவையில் இளம்பெண் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை வெங்கட்டா நகர் 2ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (68). இவர் ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி. இவரது மனைவி விமலா (55). இவர்களுக்கு யோகலட்சுமி என்ற 26 வயது மகள் இருந்தார்.

மருத்துவரான இவர் புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை இறுதியாண்டு படித்து வந்தார். தேர்வுக்கு தயாராகி வந்த அவர், மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு யோகலட்சுமி அவரது தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்கச் சென்றர். இந்த நிலையில் நேற்று காலை யோகலட்சுமி வெகுநேரமாகியும் தனது அறை கதவை திறக்கவில்லை.

இதனால் பதறிய யோகலட்சுமியின் பெற்றோர், அறை கதவை தட்டினார்கள். அவருக்கு போன் செய்தும் பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு படுக்கையில் யோகலட்சுமி இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே காலியான மயக்க மருந்து பாட்டில், இன்சுலின் மருந்து பாட்டில்கள் என இருந்தன. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் யோகலட்சுமி மயக்க மருந்து, இன்சுலின் மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது. அதில் யோகலட்சுமி கைப்பட எழுதியிருந்தது, “தற்கொலை முடிவை நானே எடுத்தேன். இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம். எனது இந்த தவறான முடிவுக்காக பெற்றோர், நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறியது காண்போரை கலங்கச் செய்தது.