ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 97 கிலோ உயர் ரக கஞ்சாவை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈரோடு – சேலம் சாலையில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதன் பின்னால் அவசரமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் அந்த வேன் சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உடனடியாக பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், அந்த பிக்கப் வேனை தெற்குப்பாளையம் என்ற பகுதியில் மடக்கிப் பிடித்து.வாகனத்தைச் சோதனையிட்டபோது, மேல் பகுதியில் தக்காளி கூடைகளை அடுக்கப்பட்டு, அதன் அடிப்பகுதியில் அதிநவீன ரக கஞ்சா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உடனடியாக வாகனத்தை ஓட்டி வந்த நபரைப் பிடித்த காவல்துறையினர், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா கடத்தி வந்த நபர் முரளி என்பது தெரியவந்தது. இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து இந்த உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்து, ஈரோடு மற்றும் நாமக்கல் சுற்றியுள்ள முக்கிய கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சப்ளை செய்யத் திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.இவரிடமிருந்து 97 கிலோ எடை கொண்ட உயர் ரக கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பிக்கப் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது .
கடந்த சில நாட்களாகவே பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து கண்டறியப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வரும் நிலையில், தற்போது தக்காளி கூடைகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட இந்த புதிய ரக கஞ்சா பிடிபட்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட முரளியிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



