தீவிரமடையும் சிறைச்சாலை கலவரம் – ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

 

சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பதற்றமான சூழல்
இதனையடுத்து இன்று காலை முதல் நீர்கொழும்பு – பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

  • மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே ஏற்பட்டு வரும் மோதல் நிலை காரணமாக மட்டக்களப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனுடன் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கமாக சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினரை நிறுத்தப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று மொத்தம் 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் தெரிவித்தார்.

மேலும் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை ஆராய்ந்தார்.