ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்

 

சவுதி அரேபியாவின் மெக்கா மீது ஏவுகணை, டிரோன் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். அமெரிக்கா-ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியா, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் உள்ளிட்ட நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட கூடும் என சவுதி அரேபிய பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில், மெக்காவின் தெற்கே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டும், டிரோன்களை கொண்டும் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், மக்களிடையே பரவலாக அச்சம் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி சவுதி அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், டிரோன்களையும், ஏவுகணைகளையும் சவுதி அரேபிய படையினர், நடு வழியிலேயே சுட்டு வீழ்த்தி விட்டனர் என தகவலை சவுதி ராணுவம் அறிவித்துள்ளது.

இதன்பின்னர் சவுதி அரசு மக்களுக்கு விடுத்திருந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்று கொண்டது. மத்திய கிழக்கில் போர் தொடங்கியது முதல் இதுவரை முதன்முறையாக மெக்கா நகரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில், மீண்டும் சவுதியின் மெக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சவுதி குடிமை பாதுகாப்பு துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் உடனடியாக விளக்கம் அளித்தது. அதில், “மெக்கா நகரில் ஆபத்து முற்றிலுமாக விலகிவிட்டது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் அரசு மற்றும் பாதுகாப்பு துறை தரும் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். யாரும் வீதிகளில் கூட்டமாக சேருவதையோ அல்லது செல்போனில் வீடியோ எடுப்பதையோ தவிர்க்கவும். அவசர உதவிக்கு 911 என்ற எண்ணை அழைக்கவும்” என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.