ஈரானில் அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைத்த தீவிரவாதக் குழு- 

 

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்படவிருந்த அமைதி ஒப்பந்தத்தை , ஈரானின் தீவிரவாத ஆதரவுக் குழுக்கள் அந்நாட்டு அரசின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாகச் செயல்பட்டுச் சீர்குலைத்துள்ளதாகக் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்த நிலையில், இந்தச் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில், ஹோர்முஸ் ஜலசந்தியில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் திடுதிப்பெனத் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல் பற்றித் தனக்கோ அல்லது இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை தலைவருக்கோ எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என அதிபர் பெசெஷ்கியன் கடும் கோபமடைந்தார். இது குறித்த விசாரணையில், முன்னாள் உளவுத்துறை தலைவரான ஹொசைன் தையிப் தலைமையிலான தீவிரவாதக் குழுவே அரசின் உத்தரவை மீறி இந்தத் தாக்குதலை நடத்தியது அம்பலமாகியுள்ளது.

அதேவேளையில், ஈரானின் உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தாபா கமேனி பொதுவெளியில் தோன்றாமல் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருப்பதும், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடற்ற சூழலுக்கு முதன்மை காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. உச்சத் தலைவரின் நேரடி வழிகாட்டுதல் இல்லாததால், அரசுப் நிர்வாகத்திற்குத் தெரியாமலேயே ராணுவப் பிரிவுகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் பிளவுபட்ட நிலை ஈரானில் உருவாகியுள்ளது.

இந்தத் தன்னிச்சையானத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களையும் தடைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானிய அதிபர் பெசெஷ்கியன் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயன்றபோதிலும், தீவிரவாதப் பிரிவினர் போரை தீவிரப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதால், மத்திய கிழக்கில் மீண்டும் கட்டுக்கடங்காத போர்ப் பதற்றம் மற்றும் மோதல் சூழல் உருவாகியுள்ளது.