இந்தோனேசியாவில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்து

 

பயணிகள் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 129 பேரின் கதி என்ன?

விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். மாயமான 129 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயா தீவில் இருந்து விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 என்ற பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போர்னியோ தீவில் உள்ள பன்ஜார்மாசின் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 213 பயணிகள் மற்றும் 30 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பன்ஜார்மாசினில் உள்ள துறைமுகத்தில் இருந்த சுமார் 148 கிமீ தொலைவில் உள்ள ஜாவா கடல் பகுதியில் விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 கப்பலின் சிக்னல் கிடைத்த நிலையில், அதன்பிறகு மாயமானதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடற்படையினர், மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாயமான கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகி விட்டனர். 108 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாயமான 130 பேரை தேடும் பணிகளில் கடற்படையினர், மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 17,000க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்ட இந்தோனேசிய மக்கள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்கு படகுகள், கப்பல்களையே பெரிதும் நம்பி உள்ளனர். இதனால் அடிக்கடி படகுகளும், கப்பல்களும் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகவது தொடர்கதையாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.