கலிபோர்னியாவில் நடந்த தனித்தனி சம்பவங்களில் தோழிகள் இரண்டுபேரை கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிலா பேபி(32). இவரும் கேரளாவை சேர்ந்த ஆன் மேரி மேத்யூ(35) மற்றும் அஞ்சனா ஹரி(35) மூன்று பேரும் நண்பர்கள். இந்நிலையில் அனிலா பேபி, தனது தோழிகள் ஆன்மேரி மற்றும் அஞ்சனாவை கொலை செய்துள்ளார்.சவுத் பே பகுதியில் உள்ள ஜான் ஜோஸ் மற்றும் மில்பிடாஸ் ஆகிய இரண்டு நகரங்களில் இந்த கொலைகள் நிகழ்ந்துள்ளன.
இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தூரம் 20கி.மீட்டருக்கும் குறைவாகும். ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி ஒன்றரை மணி நேர இடைவெளியில் கொலை செய்துள்ளார். கொலை செய்த அதே நாளில் அனிலா கைது செய்யப்பட்டார். முதலில் அஞ்சனா ஹரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கடந்த 8ம் தேதி மேத்யூவின் கொலை தொடர்பாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த கொலைகளுக்கான நோக்கம், சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது. இந்நிலையில் வியாழன்று சாண்டா கிளாரா கவுண்டி நீதிமன்றத்தில் அனிலா ஆஜர்படுத்தப்பட்டார்.



