பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்தது. பேரழிவின் 13வது நாளான நேற்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை உடைந்து விழுந்ததில் கடந்த மாதம் 26ம் தேதி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக நேற்று அதிகரித்துள்ளது. 589 வெளிநாட்டினர் உட்பட காணாமல் போன 4,996 பேரை தேடும் பணியை மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேற்கெண்டு வருகின்றன. இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 13வது நாளான நேற்று நேபாள அரசு தேசிய துக்க தினத்தை கடைபிடித்தது. இந்து மத பாரம்பரியத்தின்படி, ஒரு மரணம் ஏற்பட்டால் 13வது நாள் துக்கம் அனுசரிக்கப்படும். அதன்படி, நேபாளம் முழுவதும் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவு இரங்கல் செய்தியில், ‘‘பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் துயரத்திற்குள்ளான அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன. இக்கட்டான இந்த நேரத்தில் இந்தியா, நேபாளத்துடன் துணை நிற்கிறது. தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாளத்தின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்’’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேபாளத்தின் உயிர்நாடியான சுற்றுலா துறையை மீட்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசு தொடங்கியிருக்கிறது.வரலாற்று இடங்களை பார்வையிடுக
நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாத்துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 6.7 சதவீதப் பங்களிப்பை கொண்டுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவது நேபாளத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஓட்டல்கள், மலையேற்ற ஏஜென்சிகள், வழிகாட்டிகள், போர்டர்கள், விமான நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கக் கூடும்.



