ஈரான்ஹோமுஸ் நீரிணை பாதை ஈரான் தடைசெய்ய– ஈரான் அரசு முடிவு !

 

வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்காவுடனான ராணுவ மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்சார் எண்ணெய் வர்த்தகப் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ அருகே புதிய ‘தடைசெய்யப்பட்ட மண்டலத்தை’ அறிவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலாளரான மொஹ்சென் ரெசாய் அரசுத் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் இந்த அதிரடித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்கக் கடற்படையின் பொருளாதார முற்றுகைக் கோட்டிலிருந்து தொடங்கி வளைகுடாப் பகுதி வரை நீட்டிக்கப்படும் இந்த புதிய கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் நுழையும் எந்தவொரு வணிக அல்லது சரக்குக் கப்பலும், ஈரானின் அதிகாரப்பூர்வத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கக் கடற்படை ஈரானிய எண்ணெய் வணிகக் கப்பல்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கும், பொருளாதார முற்றுகைகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இந்த வரைபட மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஓமன் நாட்டுடன் இணைந்து ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் மேலாண்மையின் கீழ் இயங்கும் புதிய சர்வதேசப் போக்குவரத்து வழித்தடத்திற்கான ஒப்பந்தம் மற்றும் வரைபடங்கள் விரைவில் கையெழுத்தாகவுள்ளதாகவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் நிற்கும் வரை நீரிணை வழக்கம்போல் இயங்க அனுமதிக்கப்படாது என்றும் ரெசாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கடல்வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் சுமார் ஐந்திலொரு பங்கு வரை கடந்து செல்லும் இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாதையில் ஈரான் தடைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 97 டாலரைக் கடந்து உயர்ந்துள்ளதுடன், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் ஒரு பெரும் கடல்சார் ராணுவ மோதல் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளதால் சர்வதேச நாடுகள் கடும் கவலையடைந்துள்ளன.