உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்திய நிறுவனத்துடன் செய்யப்பட்ட ரூ.769 கோடி ஒப்பந்த முறைகேடு காரணமாக, எஸ்தோனியா நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 2022ம் ஆண்டு போரைத் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள சிறிய ஐரோப்பிய நாடான எஸ்தோனியா, உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகளை கொள்முதல் செய்து வழங்க திட்டமிட்டது.
இதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் 2024ம் ஆண்டு இத்தாலியில் பதிவு செய்யப்பட்டு, இந்தியாவின் ‘நெகோ டிஃபென்ஸ் மியூனிஷன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘டேட்டாசெல் எஸ்.ஆர்.எல்.’ என்ற நிறுவனத்துடன் எஸ்தோனிய பாதுகாப்பு முதலீட்டு மையம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 7 கோடி யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.769 கோடி) முன்பணமாக அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், பீரங்கி குண்டுகளை விற்பனை செய்ததில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத இந்த நிறுவனத்தால் உரிய நேரத்தில் ஆயுதங்களை வழங்க முடியவில்லை. மேலும், 2025ம் ஆண்டு சப்ளை செய்யப்பட்ட வெடிபொருட்களும் போதிய தரக்கட்டுப்பாட்டுடன் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, எஸ்தோனிய தேசிய தணிக்கை அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில், ராணுவ அமைச்சகத்தின் நிதி பயன்பாடு மற்றும் ஆயுத கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடுகளும் குளறுபடிகளும் நடந்திருப்பது அம்பலமானது. இந்த நிதியை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து மீட்டெடுக்க முடியாவிட்டால், எஸ்தோனிய அரசு தனது சொந்த பட்ஜெட்டில் இருந்து ரூ.769 கோடியை ஈடுகட்ட வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எஸ்தோனிய நாட்டின் பாதுகாப்பு என்பது தனிநபரின் விவகாரம் அல்ல; அது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். எனவே பாதுகாப்புத் துறைக்கான முழு அரசியல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு நான் பதவி விலகுகிறேன்’ என்றார். மேலும் பாதுகாப்பு முதலீட்டு மையத்தின் தலைமை இயக்குனர் எல்மர் வாஹெர் கூறுகையில், ‘முன் அனுபவம் இல்லாத நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அளித்திருக்கவே கூடாது’ என்று வேதனை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஒப்பந்தத்தை எஸ்தோனிய அரசு ரத்து செய்துள்ள நிலையில், இந்திய நிறுவனம் மீது சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து முன்பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கொள்முதல் ஊழல் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரி செலுத்துவோரின் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஐரோப்பிய ஆணையமும் எஸ்தோனிய அதிகாரிகளுடன் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.தமிழ்நாடு செய்திகள்



