20 வயது இளம்பெண் ரயில் டிக்கெட் வாங்கிதருவதாக கூறி பாலியல்

பலாத்காரம்.. 54- ரயில்வே ஊழியர் கைது..

 

ஒடிசாவின் ரூர்கேலா ரயில் நிலையத்தில் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி 20 வயது இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 54 வயதான ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர் கபிலேஷ்வர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ரயில்வேயில் வால்வு ஆபரேட்டராக பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்த அந்த இளம்பெண், தனது இரண்டு உறவினர்களுடன் ரூர்கேலா ரயில் நிலையத்தில் காத்திருந்தார். உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காத நிலையில், டிக்கெட் தொடர்பாக விசாரிக்க சென்றபோது கபிலேஷ்வர் சிங் அவரை அணுகி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் ஏற்பாடு செய்து தருவதாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் உள்ள ஆபரேட்டர் அறைக்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற அவர், அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் சம்பவத்தை வெளியில் தெரிவித்தால் பிரச்சினை ஏற்படும் என மிரட்டி, ரூ.2,000 வழங்க முயன்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் தாக்க முயன்றபோது அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து தனது உறவினர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் மூவரும் அரசு ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இளம்பெண் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.