கனடாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பரிகாரம் செய்வதாக கூறி, நிர்வாண பூஜை நடத்தி பணம் பறித்த தென்காசியை சேர்ந்த கிளி ஜோசியர் இசக்கிமுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கனடா நாட்டுக் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 37 வயது இலங்கைத் தமிழ் பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வருகிறார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர், அண்மையில் தமிழகத்திற்குச் சுற்றுலா வந்த நிலையில், சென்னையில் தங்கி பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார்.
வலை விரித்த கிளி ஜோசியர்
இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உலா வந்தபோது, அங்கிருந்த தென்காசியைச் சேர்ந்த கிளி ஜோசியர் இசக்கி முத்து என்பவரைச் சந்தித்துள்ளார். சோசியல் மீடியாவில் அப்பெண்ணை ஏற்கனவே பார்த்திருந்த இசக்கி முத்து, அதை வைத்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தாயாரின் உடல்நிலை குறித்துத் துல்லியமாகக் கணிப்பது போலப் பேசி அப்பெண்ணை தன் வசப்படுத்தியுள்ளார்.
மேலும், கிரக நிலைகள் சரியாக இல்லை என்றும், “தோஷ நிவர்த்தி பூஜை செய்யாவிட்டால் தாயாரைப் போல உங்களுக்கும் புற்றுநோய் வரும்” என்றும் கூறி அப்பெண்ணைப் பயமுறுத்தியுள்ளார்.
நள்ளிரவு நிர்வாண பூஜை அதிர்ச்சி
பயந்துபோன பெண்ணிடம், தோஷத்தைக் கழிக்க ₹20,000 செலவாகும் எனக் கூறிய ஜோசியர், அறையில் நள்ளிரவு 12 மணிக்கு ஆடைகளின்றி நிர்வாணமாக நிற்குமாறும், தான் வீடியோ காலில் பார்த்தபடி கோயிலில் யாகம் வளர்ப்பதாகவும் நம்ப வைத்துள்ளார். அதை உண்மை என நம்பிய அப்பெண்ணும் வீடியோ காலில் தோஷ பூஜையில் ஈடுபட்டுள்ளார்.
பூஜை முடிந்த மறுநாளே தனது உண்மையான ரூபத்தைக் காட்டிய இசக்கி முத்து, வீடியோ காலில் பதிவான காட்சிகளைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவதாக மிரட்டி ₹5 லட்சம் பணம் கேட்டுள்ளார். அச்சமடைந்த அப்பெண் முதற்கட்டமாக ₹70,000 வரை கொடுத்துள்ளார். ஆனால், மீண்டும் மீண்டும் பணமும், கூடவே உடலுறவுக்கும் அழைத்துப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இனி பொறுக்க முடியாது என உணர்ந்த அப்பெண், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், செல்போன் எண் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கி முத்து என்பதும், சென்னை மேன்சனில் தங்கி மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் கிளி ஜோசியம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இதேபோல ஐந்து முறைக்கும் மேலாக அப்பெண்ணை நிர்வாண பூஜை செய்ய வைத்து ஏமாற்றியதும் அம்பலமானது.
17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
தனிப்படை போலீசார் குற்றாலத்தில் பதுங்கியிருந்த இசக்கி முத்துவை உடனடியாகக் கைது செய்து, அவரது செல்போனைக் கைப்பற்றினர். வேறு ஏதேனும் பெண்களை இதுபோல ஏமாற்றியுள்ளாரா என்றும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இசக்கி முத்து வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



