ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் இறுதிக்கட்டம்: அதிபர் டிரம்பை தொடர்ந்து ஈரானும் அறிவிப்பு

 

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அரசை கவிழ்ப்பது மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை முன்வைத்து இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை தொடங்கியது. ஆனால் அந்த நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஒப்பந்தம் உருவாக்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் இரண்டு பிராந்திய அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர். போரின் ஆரம்ப கட்ட தாக்குதல்களில் கமேனி காயமடைந்து இருக்கலாம் என்றும் அதன் பின் அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாகவே இந்த வாரமே ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் மிக முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதோடு உலகப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் குறையவும், போர் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.