நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள நீர்மின் சுரங்கம் ஒன்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (04) இரண்டு பேர் 09 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில், போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளுக்கு அருகிலுள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் சேதமடைந்தது. அதில், 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அவர்களை மீட்கும் பணியில் நேபாள இராணுவத்தினர் கடந்த 09 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் ஆகிய இருவரை நேபாள இராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு சுவாசிக்கத் தேவையான ஒட்சிசன், குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும் சர்தேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



