ஈரான் விவகாரத்தில் நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்போவதில்லை. ரகசிய நடவடிக்கைகள்” –

 

ஈரானுக்கு எதிராக பொருளாதார, ராணுவ, தூதரக, ரகசிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் அனைத்தும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வசம் உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.வான்ஸ், “ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் திட்டங்களை நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்போவதில்லை. அவ்வாறு அறிவித்தால், அது அதிபர் ட்ரம்ப்பின் முடிவெடுக்கும் திறனைக் கட்டுப்படுத்தும்.

ஈரானை கையாள்வதற்கு எங்களிடம் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவறறை அதிபர் ட்ரம்ப் பயன்படுத்துவார். சிலவற்றை பயன்படுத்த மாட்டார். ஆனால், சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.

பொருளாதார ரீதியில் அழுத்தம், ராணுவ ரீதியிலான அழுத்தம், தூதரகம் மூலமான அழுத்தம், ரகசியமான முறையில் கொடுக்கப்படும் அழுத்தம் ஆகியவை இதில் அடங்கும். நிச்சயமாக இவை அனைத்தும் அதிபரின் கையில் உள்ள கருவிகள்.

ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை ஈரான் தொடர்ந்து குறிவைக்கிறது. வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதிலும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தொடர்வதிலும் அமெரிக்க ராணுவம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஹார்முஸ் நீரிணையில் பயங்கரவாதிகளைப் போல செயல்படுவதை ஈரான் நிறுத்த மறுக்கிறது. இதனால், ஒரு எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.

ஈரானுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதைத் தீர்மானிப்பதில் அமெரிக்கா நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பது முக்கியம்.

பொருளாதார ரீதியாக ஈரானைத் தனிமைப்படுத்துவதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சில கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும், அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நல்லுறவைப் பேணி வருகிறார்.

சீனாவைப் பற்றி பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும், சர்வதேச விவகாரத்தில் தங்கள் விருப்பப்படி காரியம் நடக்கவில்லை என்பதற்காக வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரு நாட்டை (ஈரான்) போல அவர்கள் இல்லை. அந்த வகையில் அவர்கள் சற்று அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட தயாராக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்காக, அமெரிக்காவின் ஒவ்வொரு கோரிக்கையையும் சீனா ஏற்று நடக்கிறது என்று அர்த்தமல்ல” என தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்​களாக நீடிக்​கும் அமெரிக்​க – ஈ​ரான் மோதல் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழியி​லான கப்பல் போக்​கு​வரத்து ஏற்​கெனவே பாதிக்கப்பட்​டுள்​ளது. குறிப்​பாக, உலகளா​விய கச்சா எண்​ணெய் விலையை உயரச் செய்து சர்​வ​தேசப் பொருளா​தா​ரத்​துக்​குப் பெரும் நெருக்​கடியை ஏற்படுத்​தி​யுள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்​கியிருப்பது பதற்​றத்தை மேலும் அதி​கரிக்​கும் வித​மாக அமைந்​துள்​ளது கவனிக்கத்தக்கது.