சீரமைப்பு பணியின்போது 98 கோடி தங்க கட்டிகள் கண்டுபிடிப்பு

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் கிழக்கு பகுதியில் பிளாண்டர்ஸ் மாகாணத்தின் டென்டர்மாண்ட் நகரில் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடம் காவ் ஓஸ்ட் வாண்டரன் என்ற தொண்டு நிறுவன அமைப்பிற்குச் சொந்தமானது. இந்த தொண்டு நிறுவனம் சுமார் 47,000 மக்கள் வசிக்கும் பிளெமிஷ் சமூகமான டெண்டர்மாண்ட் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த தொண்டு நிறுவன அமைப்பின் இயக்குநரான கீர்ட் ஹில்லார்ட். தொண்டு நிறுவனத்தில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது புதிய கழிவுநீர் குழாய்களைப் பதிப்பதற்காகத் துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு சுவரின் அடித்தளப்பகுதிக்குள் சுமார் ரூ.98 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், நாணயங்கள் பதுங்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முதலில் நாணயங்கள் என்று நினைத்த அவர்கள் பெரிய அளவில் மறைத்து வைத்து இருந்த தங்க கட்டிகளை பார்த்ததும் மலைத்து விட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்தும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அந்த தங்க கட்டிகளுக்கு யாருமே உரிமை கோரவில்லை. இதை அறிந்ததும் டென்டர்மாண்ட் நகர மக்கள் தங்க கட்டிகளையும், தங்க நாணயத்தையும் அள்ளிச்செல்ல குவிந்துவிட்டனர்.

அவர்களை தடுத்த போலீசார் அந்த கட்டிட பகுதிக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து உள்ளனர். மேலும், அந்த வீடு முழுமையாகச் சோதிக்கப்பட்டு, கண்டெடுக்கப்பட்ட தங்கம் அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது இந்த தங்ககுவியலை யார் வைத்துக்கொள்வது என்ற புதிய பிரச்னை எழுந்துள்ளது.
பெல்ஜிய சட்டப்படி, இந்தச் செல்வத்தின் உண்மையான உரிமையாளர் அதை உரிமை கோருவதற்கு ஐந்து ஆண்டுகள் அவகாசம் உள்ளது.
யாரும் உரிமை கோர முன்வராத பட்சத்தில், சிவில் சட்டத்தின்படி, பிறர் சொத்தில் கண்டெடுக்கப்படும் புதையல், அதைக் கண்டுபிடித்த கட்டுமான தொழிலாளர்களுக்கும், கட்டிடத்தின் தற்போதைய உரிமையாளருக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
ஆனால், அந்தச் செல்வம் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையது அல்ல என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்த விதி பொருந்தும்.
எனவே உரிமையாளர் ஒருவர் முன்வருவதற்காக, கட்டுமானப் பணியாளர்களும் அந்தத் தொண்டு நிறுவனமும் இப்போது 1,823 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.