இம்ரான்கான் பாகிஸ்தான் சிறையில் இறந்துவிட்டாரா? 

 

பாக்.சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இறந்து விட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் இம்ரான் கான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம் என்று அஞ்சியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் எமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அந்தப் பத்திரிகையாளர் இம்ரான் சிறையில் இறந்திருக்கலாம் என்று ராணுவத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் என்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார். இதனால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து வஜாஹத் சயீத் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். நேற்று அவர் யூடியூப் வீடியோவில் கூறுகையில்,’ ராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்த மூன்று மூத்த அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உளவுத் தகவல் அல்ல. மாறாக அது அவர்களின் தனிப்பட்ட மதிப்பீடு மட்டுமே. இம்ரான் கான் இறந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அந்த அதிகாரிகள் யாரும் நேரில் பார்க்கவில்லை. அவை அச்சங்கள் மற்றும் சந்தேகங்கள் மட்டுமே’ என்றார்.