இந்திய மீட்புப்படைக்கு நேபாளம்-அனுமதி வழங்கி உத்தரவு

 

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் 600 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சிறப்பு மீட்புக் குழுக்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. நேபாளத்தில் உள்ள போதேகோஷி மற்றும் திரிசூலி நதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 600 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். மேலும், 178 இந்தியர்கள், 65 அமெரிக்கர்கள், 53 உக்ரைனியர்கள், 35 ஆஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள் உட்பட 1,924 பேர் மாயமாகி உள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தங்களது மீட்புப் படையினரே பணிகளை மேற்கொள்ள தகுதியுடன் இருப்பதாகவும், வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை என்றும் நேபாள அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால், மாயமான தங்கள் நாட்டு மக்களை மீட்க அனுமதிக்குமாறு பல்வேறு நாடுகளின் தூதரகம் மூலம் தூதரக ரீதியான அழுத்தம் தீவிரமடைந்ததை அடுத்து, நேபாள அரசு தனது முடிவை மாற்றி இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் சிறப்பு மீட்புக் குழுக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, நீர்மின் திட்ட சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ள சுமார் 1,000 தொழிலாளர்களை மீட்கும் பணிகளிலும், சடலங்களை விரைவாக அடையாளம் காண்பதற்கான டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை பணிகளிலும் வெளிநாட்டு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானாலுடன் ஆலோசனை நடத்தியதுடன், 10 டன் நிவாரண பொருட்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் சுரங்க மீட்பு நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக நேபாள அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வெள்ளத்தில் மாயமான தங்களது நாட்டு குடிமக்களை தேடும் பணிகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு சர்வதேச நாடுகளிடம் இருந்து கடுமையான அழுத்தம் வந்தது.

இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில தொழில்நுட்ப மீட்பு பணிகளுக்கு மட்டும் வெளிநாட்டு நிபுணர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் அவசர மருத்துவ உபகரணங்கள், நிவாரணப் பொருட்கள் மற்றும் 11 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் சுரங்க மீட்புக் குழுவினர் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிவாரணப் பொருட்கள் நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மகாவீர் புன்னிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதாக ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.தெற்காசிய கலாச்சாரத்தை அறிதல்

நேபாள பேரழிவில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், போதேகோஷி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் அபாயகரமாக உயர்ந்து வருவதாக சீன எல்லை அதிகாரிகள் மூலம் ரசுவா மாவட்ட போலீசார் அலுவலகத்திற்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முக்லிங் வரையிலான திரிசூலி ஆற்றுப்படுகை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை மிகுந்த விழிப்புணர்வுடன் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அந்நாட்டு வெள்ள முன்னறிவிப்பு பிரிவு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நேபாள பிரதமர் பாலென் ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, ‘வெள்ள மீட்பு பணிகளுக்காக 15,000 பாதுகாப்புப் படை வீரர்கள் முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளனர். ராணுவம் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் மூலம் இடைவிடாது மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 4,451 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொண்டிருந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ் பிரிவின் தலைமை செயல் அதிகாரி லக்ஸ் கோபிசெட்டி வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் முக்கிய திட்டங்களை வழிநடத்தி வந்த அவரை கண்டறியும் பணிகளில் மீட்பு அமைப்புகளுடன் இணைந்து அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனிப்பட்ட பயணமாக நேபாளம் சென்ற எங்கள் நிறுவன அதிகாரி லக்ஸ் கோபிசெட்டியை தற்போது வரை தொடர்புகொள்ள முடியவில்லை; அவரை பத்திரமாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முகமைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதுடன், அவரது குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் வழங்கி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

நேபாள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2,500க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘திரிசூலி நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய 63 தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் உட்பட மொத்தம் 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர். மேலும், சீனாவில் இருந்து 149 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாள எல்லைக்குள் நுழைந்துள்ளனர். சீனாவில் பாதுகாப்பாக தங்கியுள்ள சுமார் 400 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ள பாதிப்பால் தகவல் தொடர்பு கிடைக்காமல் உள்ள சுமார் 320 இந்தியர்களை கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நமது குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற தூதரகம் தொடர்ந்து தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.